ராயக்கோட்டையில், இ.கம்யூ., கட்சியின், 24வது வட்டார மாநாடு நடந்தது. தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில தலைவர் கெம்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, கட்சிக்கொடியை ஏற்றினார். வட்டார செயலாளர் தொட்டன் ஆண்டறிக்கை வாசித்தார். தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் லகுமையா, மாநாட்டை துவக்கி வைத்து பேசினர்.
மாநாட்டில், ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும். ராயக்கோட்டை பஞ்., பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். ஏரி புறம்போக்கு, வனம் மற்றும் புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் வீடுகளுக்கு, வகை மாற்றி வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். பரம்பரை பரம்பரையாக சாகுபடி செய்து வரும் நிலங்களுக்கு, பட்டா வழங்க வேண்டும் என்பன உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில மாதர் சங்க துணைத்தலைவி சுந்தரவள்ளி, மாவட்ட கவுன்சிலர் பழனி, ஒன்றிய செயலாளர் ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.