செய்திகள் சில வரிகளில் சேலம் | சேலம் செய்திகள் | Dinamalar
செய்திகள் சில வரிகளில் சேலம்
Added : மே 25, 2022 | |
Advertisement
 

மண்டல பூஜை நிறைவு
சேலம், மே 25-
சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழநியாண்டவர் கோவிலில், கடந்த ஏப்., 6ல் கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, 48 நாள் நடக்கும் மண்டல பூஜை தொடங்கியது. அதன் நிறைவு விழாவையொட்டி, நேற்று வள்ளி, தெய்வானை சமேத பழநியாண்டவருக்கு அபிேஷகம் செய்து சர்வ அலங்காரத்துடன், 'புஷ்பாஞ்சலி', சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள, முத்துமலை முருகன் கோவில் கும்பாபிேஷகம், கடந்த ஏப்., 6ல் நடந்தது. நேற்று, 48வது மண்டல பூஜையொட்டி, வேள்விகளுடன், சிறப்பு மஹா அபிேஷக பூஜை நடந்தது. அப்போது, மூலவர் முத்துமலை முருகன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள்
வழிபட்டனர்.
கூட்டுறவு கடன் சங்க முறைகேடு
குற்றமுறை விசாரணைக்கு உத்தரவு
சேலம், மே 25-
சேலம், அயோத்தியாப்பட்டணம், பெரியகவுண்டாபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு புகார் சென்றது. அதன் எதிரொலியாக, சேலம் சரக துணைப்
பதிவாளர் யோகவிஷ்ணு, குற்றமுறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் ரேவதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். புகாரில் உள்ள இனங்களில், உண்மை நிலையை கண்டறிய, உடனே விசாரணையை தொடங்கி, உரிய காலத்தில் அதன் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புல்லட் "அபேஸ்'
சேலம், மே 25-
சூரமங்கலம், காசக்காரனுாரை சேர்ந்தவர் செல்வராஜ், 53. இவர், 1.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ராயல் என்பீல்டு புல்லட்டை, கடந்த மார்ச், 8 இரவு, வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காணவில்லை. அவர், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆடு திருடியவர் 'கூவி' விற்றதால் சிக்கினார்
ஆத்துார், மே 25-
ஆத்துார், ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 40. இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரு ஆடுகள் மாயமாகின. நேற்று காலை, ஆத்துாரில் உள்ள இறைச்சி கடையில், 3,500 ரூபாய்க்கு ஆடு கிடைக்கும் என ஒருவர் கூவிக்கொண்டிருந்தார். மக்கள் தகவல்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரித்ததில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்த பழனிவேல், 33, என்பதும், முதல்வர் ஸ்டாலின், 'ஸ்டிக்கர்' ஒட்டிய, 'ஸ்பிளண்டர்' பைக்கில் வந்து, ஈச்சம்பட்டியில் ஆடுகளை திருடியதும் தெரிந்தது. அவரை மல்லியக்கரை போலீசில் ஒப்படைத்தனர். பழனிவேலை கைது செய்த போலீசார், இரு ஆடுகள், பைக்கை பறிமுதல் செய்தனர்.
வாகனம் மோதி முதியவர் பலி
தலைவாசல், மே 25-
சம்பேரி பஸ் ஸ்டாப் வழியாக, நேற்று காலை, 6:30 மணிக்கு, 60 வயது மதிக்கத்தக்க முதியவர், சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம், முதியவர் மீது மோதியது. அதில், அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தலைவாசல் போலீசார், இறந்தவர் விபரம், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X