ஏற்காட்டில், 45வது கோடை விழா, மலர் கண்காட்சி, இன்று தொடங்கி, 8 நாள் நடக்கிறது. அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், மதிவேந்தன் ஆகியோர், கோடை விழா, மலர் கண்காட்சியை, மாலை, 4:00 மணிக்கு தொடங்கி வைக்கின்றனர். தொடர்ந்து, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகின்றனர்.
குழந்தைகள், சுற்றுலாப்பயணியர் என, அனைத்து தரப்பு மக்களையும் கவர, தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில், அண்ணா பூங்காவில், 5 லட்சம் மலர்களால் கண்காட்சி, பழக்கண்காட்சி, காய்கறி கண்காட்சிகள் அமைக்கப்படுகின்றன. அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, அரசின் திட்டங்கள், சாதனைகளை விளக்கும் பல்துறை பணிவிளக்க முகாம் நடக்கிறது. கால்நடை துறை சார்பில், செல்ல பிராணிகள் கண்காட்சி, பாரம்பரிய உணவு போட்டி, கோலப்போட்டி, படகுப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்
படுகின்றன.
சுற்றுலா பயணியரை மகிழ்விக்க சர்வதேச திரைப்படங்கள், இன்னிசை நிகழ்ச்சி, வண்ணமிகு கலை நிகழ்ச்சி, கோடை விழாவை அலங்கரிக்கின்றன. ஜூன், 1 வரை நடக்கும் கோடை விழாவை மக்கள் கண்டுகளிக்க, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
வனச்சரகர் இடமாற்றம்
ஏற்காடு வனச்சரகரை மாற்றம் செய்து, வனத்துறை கமிஷனர் சையது முகமது அப்பாஸ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஏற்காடு வனச்சரகராக பணியாற்றிய உமாபதி, மதுரை மண்டலம், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார். திருச்சி மண்டலம், அரியலுார் வனச்சரகர் பழனிவேல், ஏற்காடு வனச்சரகராக மாற்றப்பட்டுள்ளார். இன்று கோடை விழா தொடங்கும் நிலையில், அவர் காலையில் பொறுப்பேற்கிறார்.
விடிய, விடிய நடந்த பணி
ஏற்காட்டில் இன்று மாலை, 4:00 மணிக்கு, 45வது கோடை விழா, மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, வேளாண்,- உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைக்க உள்ளனர்.
ஆனால், மலர் கண்காட்சிக்கு மேட்டூர் அணை, மகளிர் இலவச பஸ், பட்டாம்பூச்சி, பழங்களுடன் கூடிய மாட்டு வண்டி, வள்ளுவர் கோட்டம் போன்ற வடிவங்கள் அமைக்கும் பணி, நேற்று வரை நிறைவடையவில்லை. இதனால், அப்பணியில் ஈடுபட்டுள்ளோர், நேற்று இரவு முழுதும், விடிய விடிய பணியில் ஈடுபட்டனர். இன்று காலை, பணி முடிந்து விடும் என, தெரிவித்தனர். மேலும் அண்ணா பூங்கா, ஏரி பூங்கா முழுதும், வண்ண விளக்குகளால் அலங்கரித்து வருகின்றனர்.