சுகாதார பணிகளில் சிறப்பாக பணியாற்றிய, மோகனுார் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவ அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளான, கர்ப்பிணிகளின் விபரங்களை பதிவு செய்தல், கர்ப்பிணிகளுக்கான மாதாந்திர பரிசோதனை, மகப்பேறு சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
மேலும் காசநோய், தொழுநோய், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் சிகிச்சை, பயனாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்பட்ட நபர்களின் சுகாதார முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, கடந்த மாத சுகாதார பணிகளில் சிறப்பாக பணியாற்றிய, மோகனுார் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலருக்கு முதல் பரிசு, நாமகிரிப்பேட்டை மற்றும் பேளுக்குறிச்சி மருத்துவ அலுவலர்களுக்கு முறையே, இரண்டாம், மூன்றாம் பரிசுகளை, கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்.
அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன் உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.