'நெக்' முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி உள்ளதால், பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக, பண்ணையாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நாமக்கல், சேலம் மாவட்டத்தில் உள்ள, 1,000 பண்ணைகளில் உள்ள, ஐந்து கோடி கோழிகள் மூலம், தினமும், 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும்.
இந்த முட்டை கொள்முதல் விலையானது, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது, ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய நாட்களில், கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த, 11ம் தேதி, 365 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, ஒரு வாரத்தில், 110 காசு அதிகரித்தது. இது, பண்ணையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. இதற்கிடையில், கடந்த, 22ல், 30 காசு குறைக்கப்பட்டு, 445 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இது, பண்ணையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, பண்ணையாளர்கள் கூறியதாவது:
முட்டை கொள்முதல் விலையை, 10 காசு, 15 காசு என்ற அளவில் மட்டுமே உயர்த்த வேண்டும். 25, 30 காசு என உயர்த்துவது சரியல்ல. ைஹதராபாத் மண்டலத்தில் திடீரென ஏற்றுவது, குறைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவற்றையே, நெக் பின்பற்றுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் என்ன விலை என்பதை அறிந்து, அவற்றை பின்பற்ற வேண்டும். மைசூர் மண்டலத்தில் முட்டை கொள்முதல், விற்பனை விலையை ஒட்டி, நாமக்கல் மண்டலத்தில்,கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கின்றனர். இந்த போக்கை கைவிட வேண்டும்.
அதனால், கொள்முதல் விலையை நிர்ணயம் செய்வதில், 'நெக்'கில் குளறுபடி உள்ளது. அதன் காரணமாக, பண்ணையாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும், 'நெக்' விலையில் இருந்து, 30 காசு குறைத்து விற்பனை செய்ய பரிந்துரைப்பதை, பண்ணையாளர்கள் விரும்பவில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்), நாமக்கல் மண்டலத் தலைவர் செல்வராஜ் கூறியதாவது:
மார்க்கெட்டில் தேவைக்கு ஏற்ப, கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ைஹதராபாத் மண்டலத்தில் முட்டை விலை குறையும் போது, நாம் குறைக்கவில்லை என்றால், சென்னைக்கு, அங்கிருந்து முட்டை விற்பனைக்கு வந்துவிடும்.
அதன் காரணமாக, நமது முட்டை விற்பனை இன்றி தேக்கம் அடைந்துவிடும். அதனால், பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும். அதனால், ைஹதராபாத் மண்டலத்தில் விலை குறைக்கும் போது குறைப்பதும், உயர்த்தும்போது உயர்த்துகிறோம். மைசூர் மண்டலத்துக்கும், நமக்கும் சம்பந்தம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.