பள்ளிபாளையத்தில் உற்பத்தி செய்யப்படும் துணிகளுக்கு மீட்டருக்கு, இரண்டு ரூபாய் விலை உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில், 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்படுகின்றன. இதில் லுங்கி, துண்டு உள்ளிட்ட துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்கிறது. நுால் விலை உயர்வால், துணிகளின் உற்பத்தி செலவு அதிகரித்து, உற்பத்தியாளர்கள் தினமும் அதிக நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் கடந்த, 16ம் தேதி முதல், ஒரு வாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டன.
நேற்று முன்தினம் மீண்டும் உற்பத்தி துவக்கி, பகல் நேரத்தில் மட்டும் உற்பத்தி நடக்கிறது. நஷ்டத்தை சமாளிக்கும் வகையில், உற்பத்தி செய்யும் துணிகளுக்கு கூடுதல் விலை வைத்து விற்க, உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளிபாளையம் வட்டார ஜவுளி உற்பத்தியார்கள் சங்கத்தலைவர் கந்தசாமி கூறியதாவது;
நுால் விலை உயர்வால் துணிகளின் உற்பத்தி செலவு அதிகரித்து விட்டதால், நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் சம்பளம், பராமரிப்பு செல்வு, மின்கட்டணம், இதர செலவுகளை சமாளிக்க, உற்பத்தி செய்யும் துணிகளுக்கு, மீட்டருக்கு, இரண்டு ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.