கோடை மழையை காரணம் கூறி, சந்தையில் வரமிளகாய் விலையை வியாபாரிகள் உயர்த்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பச்சை மிளகாய், வரமிளகாய் உற்பத்தியில் தென் மாவட்டங்களான விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல், தர்மபுரி மாவட்டங்களும், ஆந்திராவில் குண்டூர் உள்ளிட்ட பகுதிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தாண்டு தமிழகம் மற்றும் ஆந்திராவில் பெய்த கோடை மழையால், வரமிளகாய் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து தர்மபுரி உட்பட, தமிழகத்தின் பெரும்பாலான சந்தைகளில் வரமிளகாய் விலை, கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ, 180 ரூபாய் என இருந்தது, நேற்று நல்லம்பள்ளி வாரச்சந்தையில், முதல் ரகம், 270 ரூபாய், இரண்டாம் ரகம், 240 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், 'பச்சை மிளகாயை செடிகளில் பழுக்க விட்டு, பின் அவற்றை காய வைத்து, வர மிளகாயை உற்பத்தி செய்கின்றனர். விவசாயிகளிடம் இருந்து விளைச்சல் அதிகரிக்கும்போது, குறைந்த விலைக்கு வரமிளகாயை கொள்முதல் செய்த வியாபாரிகள், கோடை மழையை காரணம் காட்டி, வரமிளகாய் விலையை உயர்த்தி வருகின்றனர்' என்றனர்.