செல்லியம்பாளையத்தில் நடந்த முதல்வர் விழாவுக்கு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து அரசு, தனியார் பஸ்கள் திருப்பி விடப்பட்டன. இதனால் கிராமப்புறங்களுக்கு, 70 சதவீத பஸ்களின் சேவை இயக்கப்படாததால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில், நேற்று காலை, தண்ணீரை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து தி.மு.க., சார்பில் ஆத்துார், செல்லியம்பாளையத்தில் நடந்த, ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதற்காக, சேலம் மாவட்டம் மட்டுமின்றி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து, மக்களை கட்சி நிர்வாகிகள் அழைத்து வந்தனர்.
சேலம் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட மாநகராட்சிபகுதியில், வார்டுக்கு, 3 பஸ்கள் வீதம், 60 வார்டுக்கு, 180 பஸ்கள்; ஓமலுார் ஒன்றியத்தில், 20; மேற்கு, கிழக்கு மாவட்டங்களில் தலா, 200 என, 600 பஸ்கள், செல்லியம்பாளையத்துக்கு திருப்பி விடப்பட்டன. இதில், சுற்றுலா பஸ், மினி பஸ் - 200 போக, மீதி, 400 பஸ்கள், சேலம், நாமக்கல் மாவட்ட வழி தடங்களில் இயக்கப்பட்டவை. இந்த பஸ்களின் இயக்கம், நேற்று காலை முதல், 'கட்' செய்யப்பட்டது. இதனால், சேலம், நாமக்கல்லில், 70 சதவீத கிராம சேவை கிடைக்காததால், அங்கிருந்து நகரங்களுக்கு தனியார் நிறுவனங்கள், வர்த்தக மையங்களுக்கு வேலைக்கு வருவோர், படிக்க வரும் கல்லுாரி, பள்ளி மாணவ, மாணவியர் சிரமத்துக்கு ஆளாகினர்.