புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே, ஆவுடையார்பட்டினம் பகுதியில், தொழிலதிபரை கழுத்தை அறுத்து, கொலை செய்து, வீட்டில் இருந்த 170 சவரன் நகைகளை திருடி சென்ற எட்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே, ஆவுடையார்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நிஜாம், 52. ஆப்டிக்கல் கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.கடந்த மாதம் 24 நள்ளிரவில் மர்ம நபர்களால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இவரது மனைவி ஆயிஷா பீவி, 48, என்பவரை கட்டிப் போட்டு, பீரோவில் இருந்த 170 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இந்த துணிகர திருட்டு தொடர்பாக, மணமேல்குடி போலீசார், ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, ஆறு தனிப்படைகள் அமைத்து, தீவிர விசாரணை நடத்தினர். தனிப்படை போலீசாரின் அதிரடி விசாரணையில், 27 முதல் 38 வயது வரையிலான எட்டு பேர் கும்பல் சிக்கி உள்ளது.இவர்களை நேற்று போலீசார் கைது செய்து, 120 சவரன் நகைகள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி., நிஷா பார்த்திபன் தெரிவித்துள்ளார்.