விழுப்புரம் : விழுப்புரத்தில், தி.மு.க., முன்னாள் கவுன்சிலரை கொலை செய்ய முயன்ற வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் முகமதியார் தெருவைச் சேர்ந்தவர் அகமது, 57; தி.மு.க., முன்னாள் கவுன்சிலர். மகன்கள் உமர் என்ற அசார்அலி, 29; ஷாருக், 27. இவர்களுக்குள் சொத்து பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.நேற்று முன்தினம், மகன்கள் உமர், ஷாருக் ஆகியோர், நண்பர்கள் உதவியுடன், தந்தை அகமதுவை காரில் கடத்தி, அவரின் கழுத்தை அறுத்து வீசிச் சென்றனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அகமது சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் உமர், ஷாருக், முத்தோப்பு வினோத், திடீர்குப்பம் சாரதி, 35; விஜய், நேதாஜி ஆகிய 6 பேர் மீது ஆள் கடத்தல், கொலை முயற்சி பிரிவுகளின் வழக்குப் பதிந்தனர்.இதில், சாரதியை போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.