விருதுநகர், :விருதுநகரில் மின் ஒயரை யொட்டி வளர்ந்த மரங்களால் சிறு மழை, காற்றால் கூட உராய்வு ஏற்பட்டு மின்தடை, மின்னழுத்த குறைபாடுகள் ஏற்படுகிறது. மின்துறையில் ஆள் பற்றாக்குறை நிலவுவதால் சரி செய்வதற்கு நீண்ட நேரமாகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பராமரிப்பு பணிகள் நடக்கும் போது மட்டுமே மரங்கள் வெட்டப்படும். அந்நேரத்தில் மின் ஒயரை உரசும் மரக்கிளைகளை வெட்டுவது, ஜம்பர், டிரான்ஸ்பார்மர் பழுதுகளை சரிசெய்வது, எச்.டி.,லைனை சீராக்குவது போன்ற பணிகளை மின் ஊழியர்கள் மேற்கொள்வர்.அரசு பொதுத்தேர்வுகள் நடந்து வருவதால் மாதாந்திர பராமரிப்பு மின்தடைகள் மேற்கொள்ளப்படவில்லை.வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது கோடைமழையும் பெய்து வருகிறது. இதனால் நன்றாக வளர்ந்துள்ள மரங்கள் மேலே செல்லும் மின்வயர்களை அடிக்கடி உரசுகின்றன.இதனால் சிறிய அளவில் மழை, காற்று பெய்தால் மரங்களை உரசி மின்தடை, மின்னழுத்த குறைபாடுகள் ஏற்படுகிறது. மின் ஊழியர்களும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் நகரின் வெவ்வேறு பகுதிகளில் மரங்கள் உரசி அடுத்தடுத்து மின் விபத்து ஏற்பட்டால் மின்வாரியமே திண்டாடுகிறது. விருதுநகரும் இருளில் முழ்கிவிடுகிறது.நேற்று முன்தினம் மாலை பெய்த மழையின் போது சத்திரரெட்டியபட்டி பகுதியில் மரங்கள் சாய்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. நகரின் சில பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.முன்பு பராமரிப்பு மின்தடை செய்யப்படும் வேளைகளில் மரம் அகற்றுவது, பழுதுகளை சரிபார்ப்பது என எதுவுமே முறையாக மேற்கொள்ளப்படாமல் இருந்தது தான் தற்போது அதிகமாக மரங்கள் வளர்ந்துள்ளன. தற்போது அதிகளவில் மரங்கள் வளர்ந்துள்ளதால் அதை சரிசெய்வது மின்வாரியத்திற்கு கட்டாயமாகி உள்ளது. மேலும் இதை சரிசெய்யவில்லை எனில் வரும் காலங்களில் மழை பெய்தால் அடிக்கடி மின்தடை ஏற்படும் நிலையும் உருவாகும்.