உடுமலை : விலை வீழ்ச்சியால், லட்சக்கணக்கான தேங்காய்கள், உடுமலை பகுதியிலுள்ள தென்னந்தோப்புகளில் தேங்கியுள்ள நிலையில், பாதிப்பு குறித்து, தமிழக அரசும், மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்ளாதது தென்னை விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.உடுமலை வட்டாரத்தில், 38 ஆயிரம் ஏக்கர்; குடிமங்கலம் வட்டாரத்தில், 27 ஆயிரம் ஏக்கர் ; மடத்துக்குளம் வட்டாரத்தில் 7,500 ஏக்கர் பரப்பளவிலும் தென்னை சாகுபடி உள்ளது. இப்பகுதிகளில், நீண்ட கால பயிராக, 60 லட்சத்துக்கும் அதிகமான தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தொடர் பாதிப்புகடந்த சில ஆண்டுகளாக, தென்னை மரங்களில் வெள்ளை ஈ, வாடல் நோய் உள்ளிட்ட நோய்த்தாக்குதல் அதிகளவு உள்ளது. நீண்ட காலமாக இத்தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியாமல், விவசாயிகள் திணறுவதால், உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.உற்பத்தி குறைந்தாலும், தற்போது தேங்காய் மற்றும் கொப்பரை விலை சரிவு இச்சாகுபடியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.விலை சரிவு மற்றும் கொள்முதல் செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால், இப்பகுதியில் மட்டும், லட்சக்கணக்கான தேங்காய்கள், விற்பனையாகாமல், தோப்புகளில், தேங்கியுள்ளது.பல மாதங்களாக விற்பனையில் நிலவும் பிரச்னையால், சாகுபடி செலவு உள்ளிட்ட செலவினங்களை மேற்கொள்ள முடியாமல், தென்னை விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
நேரடி கொள்முதல்கொப்பரை விலை வெளிமார்க்கெட்டில், கிலோ, 81-85 ரூபாயாக சரிந்துள்ளது. கடந்தாண்டு இதே பருவத்தில், தோப்பில் ஒரு தேங்காய், 16 -20 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.தற்போது ஏற்பட்டுள்ள விலை சரிவால், ஒரு தேங்காய், 8-12 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.தேங்காய் கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக, 105.90 ரூபாய் நிர்ணயித்து, அரசு கொள்முதல் நிலையங்கள் வாயிலாக கொள்முதல் செய்யப்படுகிறது.கொப்பரை உற்பத்திக்கான, தொழிலாளர்கள் மற்றும் உலர்கள வசதிகள் அனைத்து விவசாயிகளிடமும் இல்லை.சிறு, குறு விவசாயிகளால், தேங்காயை கொப்பரையாக மதிப்பு கூட்டுவது இயலாத காரியமாகும்.
எனவே, அரசின் கொப்பரை கொள்முதல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.இதற்கு தீர்வாக, 'கொப்பரைக்கு பதிலாக, நேரடியாக தேங்காயை அரசு கொள்முதல் செய்து, நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, கொப்பரையாக மாற்றி இருப்பு வைத்து விற்கலாம்; ஒரு டன் உரித்த தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையாக, 30 ஆயிரம் ரூபாய் அரசு கொடுக்க வேண்டும்.ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு மாற்றாக சத்துகள் நிரம்பிய தேங்காய் எண்ணெயை வினியோகிக்க வேண்டும்,' என விவசாயிகள் கோரிக்கை விடுக்கத்துவங்கியுள்ளனர்.
இதனால், தேங்காய் எண்ணெயில் கலப்படம், தேங்காய் மற்றும் கொப்பரை சந்தையில் 'சிண்டிகேட்' தவிர்க்கப்படும் என்பது விவசாயிகள் கருத்தாக உள்ளது.இந்நிலையில், தேங்காய், கொப்பரை விலை சரிவு பிரச்னைக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் மவுனம் சாதித்து வருகின்றனர்.தேர்தல் பிரசாரத்தின் போது, தென்னை சாகுபடிக்கு, பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசியவர்கள், பிரச்னையை கண்டுகொள்ளாமல், இருப்பது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.