சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நெம்மேலியில் கூடுதலாக அமைக்கப்படும், 15 கோடி லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட, கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலைய கட்டுமான பணி வேகமெடுத்துள்ளது. இப்பணிகள் முடிந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், சென்னை மட்டுமின்றி, புறநகர் பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில், குழாய் மற்றும் லாரி வழியாக, குடிநீர் வாரியத்தின் சார்பில் தினமும், 1.03 கோடி லிட்டர் எம்.எல்.டி., குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீர், பூண்டி, சோழவரம், புழல், தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் நீர்நிலைகளில் இருந்தும், மீஞ்சூர், நெம்மேலி - -1 கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்தும் பெறப்படுகிறது.
தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, கிருஷ்ணா நீர், 5ம் தேதி முதல் வருகிறது. இதனால், புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்து, சென்னையில் குடிநீர் தேவையில் பற்றாக்குறை ஏற்படவில்லை.தற்போதைய நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகளில் ஓரளவு நீர் இருப்பு உள்ளதால், பருவமழை துவங்கும் வரை, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும், பெரு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளின் எண்ணிக்கை காரணமாக, குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது.இதனால், ஏரிகள் மற்றும் பிற வழிகளில் பெறப்படும் நீர் மட்டுமின்றி, கடல் நீரை சுத்திகரித்து அதை குடிநீராக்கி வினியோகிப்பதற்காக, நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டில் உள்ளது.
இங்கு, தினமும், 10 கோடி லிட்டர் குடிநீர் தயாராகிறது. இங்கிருந்து அடையாறு, ஆலந்துார், கண்ணகிநகர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சோழிங்கநல்லுார், பெருங்குடி மண்டலங்களில், குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சில வார்டுகளில், பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. இப்பகுதிகளில் திட்டப்பணிகள் நிறைவடைந்தால், குடிநீர் தேவை மேலும் அதிகரிக்கும். இதை உணர்ந்து, நெம்மேலியில், 1,259.38 கோடி ரூபாயில், கூடுதலாக, 15 கோடி லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
கடந்த, 2020 அக்டோபர் மாதம் துவங்கிய இப்பணி, தற்போது துரித கதியில் நடந்து வருகிறது. 60 - 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதால், இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கொரோனா ஊரடங்குக்கு பின், பணியின் வேகம் மேலும் அதிகரித்துள்ளது. நெம்மேலியில் இருந்து, தென்சென்னை பகுதிக்கு, 47.35 கி.மீ., நீளத்தில் குழாய் பதிக்க திட்டமிட்டு, 39 கி.மீ., நீளத்தில் குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மீதி இடங்களிலும், ஓரிரு மாதங்களில் குழாய் பதிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெம்மேலி கடல் நீர் குடிநீராக்கும் கூடுதல் நிலைய பணிகளை, இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில், குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு, வினியோகத்தை துவக்க வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் நிலையில், சென்னை மாநகர் பகுதிக்கு கூடுதல் குடிநீர் கிடைப்பதுடன், புறநகர் பகுதிகளில் நிலவும் குடிநீர் பற்றாக்குறைக்கு விடிவு பிறக்கும் எனவும், நம்பிக்கை தெரிவித்துஉள்ளனர்.
''நெம்மேலி கூடுதல் சுத்திகரிப்பு நிலைய குடிநீர் பயன்பாட்டுக்கு வந்தால், வேளச்சேரி, உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், சோழிங்கநல்லுார், ஆலந்துார், பரங்கிமலை, பல்லாவரம் பகுதியில் போதிய குடிநீர் கிடைக்கும். அந்த வகையில், இங்குள்ள, ஒன்பது லட்சம் பேர் பயன் அடைவர். பருவ மழை, கிருஷ்ணா நீரால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கூடுதலாக, கடல்நீரை சுத்திகரிப்பதால், சென்னை மற்றும் விரிவாக்க பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.''
- குடிநீர் வாரிய அதிகாரிகள்
நடைபெறும் பணிகள்
* கடல் நீரை நிலையத்திற்கு கொண்டு வரும் குழாய் மற்றும் சுத்திகரித்த பின் உவர்நீரை கடலுக்கு வெளியேற்றும் குழாய் பதிக்கும் பணி
* கடல் நீரை உள்வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிl சுத்திகரிப்பு நீர்த்தேக்கத் தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீர் உந்து நிலையம்
* வடிகட்டப்பட்ட கடல் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் உந்து நிலையம்
* காற்றழுத்தம் வாயிலாக எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி, கசடுகளை கெட்டியாக்கும் பிரிவு
* நுண் வடிகட்டி மற்றும் சவ்வூடு பரவல் நிலைl பிரதான மின்நிலையம், நிர்வாகம் மற்றும் காப்பாளர் கட்டடம்
- நமது நிருபர் -