கோவில்பாளையம் : வியாபாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால், மூன்று ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த வணிகவளாகம் நேற்று செயல்படத் துவங்கியது.கோவில்பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் புதனன்று வாரச் சந்தை நடக்கிறது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் வந்து வாரசந்தையில் பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.வாரச் சந்தையில் மேற்கூரை இல்லை,
கான்கிரீட் தளம் இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை என்று வியாபாரிகள் புகார் தெரிவித்தனர். காலி இடங்களிலும், சாலையோரங்களிலும் கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதையடுத்து, 2019ல் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 120 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களை கூறி வியாபாரிகள் அந்த வணிக வளாகத்தில் கடை அமைக்க மறுத்துவிட்டனர். இதனால் மூன்று ஆண்டுகளாக வணிகவளாகம் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடந்தது.கடந்த வாரம் பேரூராட்சி தலைவர் கோமளவல்லி, துணைத்தலைவர் விஜயகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், வியாபாரிகளிடம் பேச்சு நடத்தினர்.கடையின் அளவு குறைவாக உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லை என்று வியாபாரிகள் கூறினர். இதையடுத்து 120 கடைகளில் மாறுதல் செய்து, 100 கடைகளாக மாற்றப்பட்டன. விளக்குகள் பொருத்தப்பட்டன. சந்தை வளாகத்தில் குப்பைகள் அகற்றப்பட்டன.இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் நேற்று வணிக வளாகத்தில் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர். 36 லட்சம் ரூபாயில் கட்டி மூன்று ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த வணிக வளாகத்துக்கு விமோசனம் கிடைத்து உள்ளது.