மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் சுற்றுப்பகுதிகளில், கறிவேப்பிலை தோட்டத்தில் கிலோ 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. விலை மோசமாக சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.மேட்டுப்பாளையம் தாலுகாவில், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில், கறிவேப்பிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இப்பகுதியில், தினமும் சுமார் ஐந்து டன் கறிவேப்பிலை அறுவடை செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்திற்கும் அனுப்பப்படுகிறது.
தற்போது ஒரு கிலோ கறிவேப்பிலை, தோட்டத்தில் பத்து ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இருந்த விலையை விட 8 மடங்கு வரை விலை சரிந்துள்ளது.இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:கறிவேப்பிலை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யப்படுகிறது. இதே கறிவேப்பிலை, ஐந்து மாதங்களுக்கு முன், தோட்டத்தில் ஒரு கிலோ, 80 லிருந்து, 100 ரூபாய் வரை விலைபோனது. தற்போது, 10 ரூபாய்க்கு விற்பனையாவதால், விவசாயிகளுக்கு கட்டுபடியாவதில்லை.சாகுபடி செலவுத்தொகைக்கு கூட, விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கறிவேப்பிலை வியாபாரிகள் கூறியதாவது: பொதுவாக ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை, கறிவேப்பிலையின் விலை உயர்ந்து காணப்படும்.இந்த மாதங்களில் திருமணம் பல்வேறு விசேஷங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி விடுதிகளுக்கு, கறிவேப்பிலையின் தேவை அதிகரிக்கும். அதனால் இந்த மாதங்களில் விலை உயர்வாக இருக்கும். ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி, கல்லுாரி விடுதிகள் அவ்வளவாக செயல்படாது. திருமண முகூர்த்தங்களும் குறைவாக இருக்கும். இந்தக்கால கட்டத்தில், கறிவேப்பிலை விலை வீழ்ச்சியடையும்.கேரளாவில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், கறிவேப்பிலையில் தேவை அங்கு குறைந்துள்ளது.
மேலும், இங்கு நல்ல மழை காரணமாக, விளைச்சல் அதிகரித்துள்ளது.முதல்தரமான கறிவேப்பிலை, கிலோ 10 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 5 ரூபாய்க்கும் விலைபோகிறது. இந்த விலை, கட்டுபடியாகாது. சில விவசாயிகள் இதனால் கடன் வாங்கும் நிலையில் உள்ளனர்.வரும் ஜூன், ஜூலை மாதங்களில் தொடர்ச்சியாக திருமணம் மற்றும் பல்வேறு விசேஷங்கள் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லுாரி விடுதிகள் திறந்து, வழக்கம் போல் இயங்கும். இதனால் கறிவேப்பிலையின் தேவை அதிகரிக்கும் என்பதால், விலை உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கறிவேப்பிலை வியாபாரிகள் தெரிவித்தனர்.