திருப்போரூர்:மாரடைப்பில் கணவர் இறந்தது சந்தேகம் இருப்பதாக, உடலை தோண்டி விசாரணை நடத்த கோரி, காயார் போலீசில் மனைவி அளித்த புகாரால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல், 56; இவர், காயார் தனியார் பள்ளியில் கூலி வேலை செய்யும்போது, இம்மாதம் 18ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.பின், இறந்தவர் உடல் காயாரிலிருந்து திருவண்ணாமலைக்கு எடுத்து செல்லப்பட்டது. இறுதி சடங்கு செய்யும்போது, அவர் உடலில் ரத்த காயம் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும், அந்நேரத்தில் செய்வதறியாமல் புதைத்தனர்.இந்நிலையில், கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உடலை தோண்டி விசாரனை நடத்த கோரியும், இறந்த கதிர்வேலின் மனைவி முத்து, காயார் போலீசில் புகார் அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:காயார் தனியார் பள்ளி வளாகத்தில், ஒப்பந்ததாரர் கோவிந்தராஜ் என்பவரின் தலைமையில், என் கணவர் வேலை பார்த்தார்.கடந்த 18ம் தேதி, கணவருடன் வேலைச் செய்யும் ராமசாமி, என் கணவரின் அண்ணன் மகன் சகாதேவனுக்கு தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, 'கதிர்வேலுக்கு மாரடைப்பு வந்து, பள்ளி நிர்வாகம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ள' என கூறியுள்ளார்.
பின், 10 நிமிடங்களில் மீண்டும் அழைத்து, அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.உடனடியாக சகாதேவன், தன் மகன் ராஜேஷ் மற்றும் உறவினர் முத்துகிருஷ்ணன் ஆகியோரை பள்ளிக்கு அனுப்பினார். அங்கு, கணவர் கதிர்வேல் உடல் இருந்தது. அருகே செல்ல முற்பட்டபோது, மாற்று உடையில் இருந்த போலீசார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், அவர்களை அனுமதிக்கவில்லை.
இறுதி சடங்கு செய்ய தண்ணீர் ஊற்றும்போது, கணவரின் உடலில் ரத்த காயம் இருந்தது. எனினும் அடக்கம் செய்துவிட்டோம்.ஆனால், கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளது. உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்து, போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.