ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் தந்தையை கழுத்தறுத்து கொலை செய்து, தப்பியோடிய போதை மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு, 45. ஸ்ரீபெரும்புதுாரில் சலுான் கடை நடத்தி வந்தார். இவரது மகன், தினேஷ், 20, கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையானவர்.இதனால், கீழ்பாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சில தினங்களுக்கு முன் தினேஷ் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சையை தொடராமல் வீட்டிற்கு திரும்பி விட்டார்.
கஞ்சா மற்றும் மதுவுக்கு பணம் கேட்டு, பெற்றோரிடம் அடிக்கடி தினேஷ் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தினேஷுக்கும், தந்தை ராமுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.இரவு மின்தடை ஏற்பட்டதால் வீட்டின் மாடியில் ராமு துாங்கிக் கொண்டிருந்தார்.
அங்கு வந்த தினேஷ், தந்தையின் கழுத்தை அறுத்து கொன்றார். துடிதுடித்த ராமு, ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். தினேஷ் தப்பியோடி தலைமறைவானர். ராமுவின் உடலை ஸ்ரீபெரும்புதுார் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி ெவைத்தனர். தப்பியோடிய தினேஷை தேடி வருகின்றனர்.