உடுமலை: 'இரிடியம்' இருப்பதாக மோசடி செய்தவர்கள் மற்றும் அவர்களை தாக்கி பணம் பறிக்க முயன்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை போலீஸ் ஸ்டேஷனில், கடந்த 24ம் தேதி, கேரளா மாநிலம், மறையூரை சேர்ந்த, ஷேக் இஸ்மாயில், 35 என்பவர், ஒரு புகார் கொடுத்தார்.புகாரில், 'உடுமலையைச்சேர்ந்த சிவராஜ், செந்தில், பழனிசாமி, ஞானசேகர் ஆகியோர் சக்தி வாய்ந்த இரிடியம் உலோகம் இருப்பதாக தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, எனது நண்பர் ரியாத், நவீன், கதிரேசன் ஆகியோருடன், உடுமலை அந்தியூருக்கு, இரிடியம் வாங்க, 2 லட்சம் ரூபாய் பணத்துடன் சென்றோம்.'அங்கு இருந்த சிவராஜ் கும்பலிடம், பணத்தை கொடுத்தோம். அப்போது, இரிடியம் உலோகத்தை பூஜை செய்து தருவதாக சொல்லி விட்டு, பணத்துடன் அக்கும்பல் தப்பியோடி விட்டது' என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.சிவராஜ் கும்பலும், உடுமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, புகார் கொடுத்துள்ளனர்.
புகாரில், 'ஷேக் இஸ்மாயில் உள்ளிட்டோர் பின்தொடர்ந்து வந்து, கத்தியை காட்டி மிரட்டி, எங்களிடம் இருந்த பணத்தையும் சேர்த்து பறிக்க முயற்சித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.இதையடுத்து, இரிடியம் இருப்பதாக ஆசைவார்த்தை காட்டி, பணம் பறித்த உடுமலை பழக்கடை சிவராஜ், 48; கோமங்கலத்தைச்சேர்ந்த செந்தில், 38; கோமங்கலம்புதுாரைச்சேர்ந்த பழனிசாமி, 48; அதே பகுதியைச்சேர்ந்த ஞானசேகர், 38 ஆகியோரை மோசடி வழக்கில் கைது செய்தனர்.
மற்றொரு கும்பலைச்சேர்ந்த, திருச்சூர் ரியாஸ், தேனியைச்சேர்ந்த வினீத் மற்றும் கதிரேசன் மறையூர் ஷேக் இஸ்மாயில் ஆகியோரை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.