மதுரை: 'ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புள்ளோரை முதல்வர் ஸ்டாலின் கட்டிப்பிடித்து வரவேற்பது, நாசகார சக்திகளுக்கு உற்சாகம் தருவதுபோல இருந்துவிடக் கூடாது' என பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் எச்சரித்துள்ளார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
சென்னையில் பா.ஜ., தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவர் பாலசந்தர் கொலையை கண்டிக்கிறோம். தமிழகத்திற்கு பிரதமர் வருவதற்கு 2 நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒரு அச்சுறுத்தலாக இருக்குமோ எனத்தெரிகிறது. கொலையாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
தி.மு.க.,வில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தங்கள் தந்தையோடும், மகன் படங்களோடும், அமைச்சர்கள்கூட தங்கள் மகன்களின் படங்களோடுதான் போஸ்டர் ஒட்டுகின்றனர். தமிழகம் முழுவதுமே முதல்வர் ஸ்டாலின் படத்தோடு உதயநிதி படத்தையும் போடுகின்றனர். பா.ஜ.,வில்தான் 33 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. உண்மையான சமூகநீதி, சுயமரியாதை உள்ள கட்சி பா.ஜ., ஆனால் தி.மு.க.,வினரோ முதுகு, இடுப்பை 2 அடி வளைத்துதான் அக்கட்சி தலைவர்களை சந்திக்க முடியும்.
தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது 'கோ பேக்' என்று சொன்ன நிலையில், ஆளுங்கட்சியாக 'வெல்கம் மோடி' என சொல்ல வேண்டிய நிலையை மக்கள் தண்டனையாக கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.