சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலர் சரத்பாபு, அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இன்று, அவர் பா.ஜ.,வில் இணைகிறார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சட்டசபை தேர்தலுக்கு பின், கட்சியில் கமலின் ஈடுபாடு குறைந்து விட்டது. அவர் வருவாய் ஈட்டும் மன நிலைக்கு மாறி விட்டார். இதனால், கட்சியால் எந்த மாற்றத்தையும் மக்களுக்காக தர முடியாது. அதனால் விலகுகிறேன்' என கூறியுள்ளார்.
பின், நம் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி: கட்சி மற்றும் தலைவரின் நடவடிக்கை, சில மாதங்களாக சொல்லும்படி இல்லை. இரண்டு உள்ளாட்சி தேர்தலின் போதும், நான் தான் பொறுப்பாளராக இருந்தேன். அப்போது கமலின் ஈடுபாடு, அதிகபட்சம் ஒரு மணி நேரம் என்றளவிலேயே இருந்தது. இதனால், கட்சி நிச்சயம்வளராது.சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்தவர்கள், கட்சிக்குள் வந்த பின்னால் தான், கமலுக்காக பணியாற்றியவர்கள் மீது வன்மம் உருவானது.
அவர்கள் மீது தேவையில்லாத புகார்களும் சுமத்தப்பட்டன.சிவ இளங்கோ, செந்தில் ஆறுமுகம், கட்சியில் இருந்து சென்றால் தான், கட்சி உருப்படும். என் மக்கள் பணி எப்போதும் தொடரும். அதற்காக இன்று, பா.ஜ.,வில் இணைய உள்ளேன்.இவ்வாறு அவர்கூறினார்.