கோவை : கோவை 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை குறித்து கிருஷ்ணா பொறியியல் கல்லுாரி முதல்வர் ஜானட்பேசியதாவது:
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தொழில்துறைகளின் தேவைக்கு ஏற்ப மாணவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம். பல நிறுவனங்கள் சான்றிதழ் படிப்புகளை கல்லுாரிகளுடன் இணைந்து வழங்குகின்றன. அதை முதலாமாண்டு துவக்கத்தில் இருந்தே படித்து தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பாடம் சார்ந்த அறிவு, மொழித்திறன், புதுவிதமாக சிந்திக்கும் திறன், கோடிங் ஆகிய திறன்களை தொழில்துறை பட்டதாரிகளிடம் எதிர்பார்க்கிறது. பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள், உயர்கல்வி வாய்ப்புகள் உள்ளன. கல்லுாரியில் படிக்கும்போது, மத்திய அரசு, பல்வேறு மாநில அரசு, வெளிநாட்டு நிறுவனங்கள், தொழில்துறைகள் நடத்தும் ஹேக்கத்தான் போட்டிகளில் பங்கேற்கவேண்டும். வெற்றி பெறாவிட்டாலும் பல அனுபவங்கள் கிடைக்கும்.
இதுபோன்ற போட்டிகளில் வெற்றி பெறுபவர்களை அந்தந்த நிறுவனங்களே சிறப்பான ஊதியத்தில் பணிக்கு எடுத்துக்கொள்கின்றன. வகுப்பறையில் கற்றல், கற்பித்தல் என்பது தற்போதைய போட்டிகள் நிறைந்த உலகில் போதாது. வகுப்பறை தாண்டி பலவற்றை கற்றுக்கொள்ளவேண்டும். படித்து முடித்தவுடன் ஆண்டுக்கு, 3 லட்சம் முதல் 90 லட்சம் ரூபாய் வரை ஊதியம் கொடுக்கும் நிறுவனங்கள் உள்ளன; அதற்கான தகுதியை மேம்படுத்தி கொள்ள வேண்டியது மாணவர்களின் பொறுப்பு.இவ்வாறு, அவர் பேசினார்.
துணை மருத்துவ படிப்புக்கு சிறந்த எதிர்காலம்
கோவை 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் துணை மருத்துவப் படிப்புகள் மற்றும் அதில் உள்ள வாய்ப்புகள் குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டீன் சுகுமாறன் பேசியதாவது:எந்த ஒரு கல்வியும், குறைந்தது அல்ல. அனைத்து பாடங்களும் சிறந்தவையே. எந்த ஒரு படிப்பாக இருந்தாலும் சிறப்பாக படித்தால் மட்டுமே முன்னேற்றம் இருக்கும். எந்த துறையாக இருந்தாலும் அதில் முதலாவதாக இருக்க வேண்டும்.
துணை மருத்துவ படிப்புகளை பயிலும் மாணவர்களுக்கு மருத்துவத் துறையில் சிறந்த வரவேற்பு உள்ளது. எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை சார்பில், 10 - 15துணை மருத்துவப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. நான்காண்டு படிப்புகளான இவற்றுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. இவற்றில் பணிபுரிவோருக்கு சிறந்த ஊதியம் வழங்கப்படுகிறது. அறுவை சிகிச்சை அரங்கு, அதற்கான தொழில்நுட்பங்கள், இருதய அறுவை சிகிச்சை துறை தொழில்நுட்பங்கள், டயாலிசிஸ் தொழில்நுட்பம், அவசர சிகிச்சை தொழில்நுட்பம், துணை மருத்துவ தொழில்நுட்பங்கள், ரேடியோதெரபி, இமேஜிங் டெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு துணை மருத்துவ படிப்புகளுக்கு அதிகளவில் வாய்ப்புகள் உள்ளன.இத்துறைகளில் சேர்வதற்கான அனுமதி நடைமுறைகள், செப்., மாதத்தில் துவங்கும். பிளஸ் 2 வில், 50 சதவீதம் மதிப்பெண் பெற்றால் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளில் பிராக்டிகல் வகுப்புகள் அதிகம். அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கொண்ட கல்லுாரிகளில் சேர்ந்தால் மட்டுமே பிராக்டிக்கல் அறிவை அதிகளவில் பெற முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.
'ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு எளிமையானது'
கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசியதாவது: உரிய கல்வித்தகுதி உள்ள அனைத்து மாணவர்களும் கட்டாயம் ஜே.இ.இ., நீட்., நுழைவுத்தேர்வுகளை கட்டாயம் எழுதவேண்டும். ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - ஜி.எப்.டி.ஐ., ஆகிய கல்லுாரிகளில் சேர்ந்து படித்தாலே சிறப்பான எதிர்காலம் உறுதியாகிவிடும்.
நம் நாட்டில், 23 ஐ.ஐ.டி., கல்லுாரிகளில் 16,232 இடங்கள், 31 என்.ஐ.டி., கல்லுாரிகளில் 23,997 இடங்கள், 25 ஐ.ஐ.ஐ.டி., கல்லுாரிகளில் 6,146 இடங்கள், 30 மத்திய அரசின் நிதியுதவி பெறும் தொழில்நுட்ப கல்லுாரிகளில் 6,078 இடங்கள் உட்பட, ஜே.இ.இ., தேர்வில், 109 கல்லுாரிகளில் 52,453 இடங்கள் உள்ளன.என்.ஐ.டி., கல்லுாரிகளுக்கு மட்டும், 12ம் வகுப்பு படித்த மாநிலம் சொந்தமாக கருதி இடஒதுக்கீடு வழங்கப்படும்.
ஆந்திராவில் படித்துவிட்டு தமிழகத்தில் உள்ள திருச்சி என்.ஐ.டி., கல்லுாரியில் இந்த ஒதுக்கீட்டில் சேர முடியாது. ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., கல்லுாரிகளில் பெண்களுக்கு, 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை கட்டாயம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஜே.இ.இ., நுழைவுத்தேர்வை, 10 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வை எழுதுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்துவருகிறது. கணிதம் எனக்கு வராது, கஷ்டம் என விழிப்புணர்வு இன்றி மாணவர்கள் ஒதுங்கிக்கொள்கின்றனர். இத்தேர்வு மிகவும் எளிமையானது.
ஜே.இ.இ., மெயின் தேர்வில் வெற்றி, தோல்வி என்பது இல்லை. பங்கேற்கும் அனைவருக்கும் தரம் வழங்கப்படும். முதல், 2.5 லட்சம் பேர் தேர்வு செய்து ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வை எழுத, தேர்வு செய்யப்படுவர். ஜே.இ.இ., தேர்வுக்கு இரண்டாம் சுற்றுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வுகளுக்கு கிடைக்கும் அனைத்து புத்தகங்களையும் படிக்காமல், என்.சி.ஆர்.டி., புத்தகங்களுடன், பிற தகுதியான எழுத்தாளர்கள் புத்தகங்களை மட்டும் திட்டமிட்டு படிக்கவேண்டும். ஜே.இ.இ.,நுழைவுத்தேர்வின் கீழ் உள்ள அனைத்து இடங்களுக்கு சேர்த்து, கலந்தாய்வு நடத்தப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.