கோபி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனங்களின் முதல் போகத்துக்காக, இதுவரை, 8 டன் விதை நெல் விற்பனையாகி உள்ளது.
கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், விதை நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த, 6ம் தேதி முதல், தடப்
பள்ளி - அரக்கன் கோட்டை வாய்க்காலில், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்நீரை கொண்டு, இரு பாசனங்களிலும், நெல் நாற்று உற்பத்திக்காக, நாற்றாங்கால் அமைக்கும் பணியில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 109 டன் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டது. அவற்றில், தற்போது ஏ.எஸ்.டி., 16 ரகம் மற்றும் டீ.பி.எஸ்., 5 என்ற இரு ரகமும், கிலோ ஒன்றுக்கு, தலா, 36 ரூபாய்க்கு, விற்பனை செய்யப்படுகிறது. இதுவரையில், இந்த இரு ரகமும், 2.95 லட்சம் ரூபாயில், எட்டு டன் அளவுக்கு விதை நெல் விற்பனையாகி உள்ளது. இன்னும் நுாறு டன் விதை நெல் விற்பனைக்காக கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம் என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.