ஈரோட்டில், மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாநகராட்சி, 51வது வார்டு, பெரியதோட்டம் ஈ.எம்.எம்.மெயின் வீதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவ்வீதியின் கடைசியில் உள்ள வீட்டின் எதிரே, மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்க கடந்த ஜனவரி மாதம் மின் கம்பங்கள் நட்டனர். அங்கு டிரான்ஸ்பார்மர் அமைக்கக்கூடாது என அவ்வீட்டார் மின்வாரிய அதிகாரிகள், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனுச் செய்தனர்.
அப்பகுதியில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதால், டிரான்ஸ்பார்மர் அமைப்பது அவசியம் என்பதை மின்வாரியத்தினர் விளக்கியும், பணிக்கு எதிர்ப்பு
தொடர்ந்தது.
நேற்று காலை, 10:15 மணிக்கு ஈரோடு சூரம்பட்டி போலீஸ் பாதுகாப்புடன், மின் ஊழியர்கள் டிரான்ஸ்பார்மர் அமைக்க வந்தனர். அப்பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் தலைமையில், மக்கள் திரண்டு மின் ஊழியர்களை முற்றுகையிட்டு டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அதே பகுதியில் சாலையின்
மற்றொரு பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்க வலியுறுத்தினர். அப்போது புனிதா என்ற பெண் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து, தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்த போலீசார், கேனை பறிமுதல் செய்தனர்.
ஈ.எம்.எம்.மெயின் வீதியில் உள்ள, ஆறு குடியிருப்பு மக்கள் தவிர அப்பகுதியில் வசிக்கும் மக்கள், மின் ஊழியர்கள் மற்றும் போலீசாரிடம் பேசி, 'தற்போது டிரான்ஸ்பார்மர் வைக்க திட்டமிட்ட இடத்திலேயே அமைக்க வேண்டும். குறைந்த மின்னழுத்தத்தால் பேன் கூட இயங்கவில்லை. பல நேரம் விளக்குகள் எரிவதில்லை. இடத்தை மாற்ற வேண்டாம்' என்றனர்.
இதுபற்றி, சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு இரு தரப்பு மக்களும், மின்வாரிய அலுவலர்களும் வந்து பேசி தீர்வு காணலாம் என போலீசார் கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்தனர்.
டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி
வைத்தனர்.