கூடலுார் : கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில் வளர்ப்பு யானைகள் முகாம் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு, அபயாரண்யம் யானைகள் முகாமில், 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் அருகே உள்ள, கூடலுார் பகுதி கிராமங்களில் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை விரட்டும் பணிக்காக, அவ்வப்போது, தெப்பக்காடு கும்கி யானைகள் அழைத்து வரப்படுகின்றன.
கும்கி யானைகளை அழைத்து வந்து, திரும்பி கொண்டு செல்வதில், வன ஊழியர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு தீர்வாக, நாடுகாணி, ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில் புதிய வளர்ப்பு யானைகள் முகாம் அமைக்க மாநில வனத்துறை திட்டமிட்டுள்ளது.
கூடலுார் டி.எப்.ஓ., கொம்மு ஓம்காரம் கூறுகையில்,''ஜீன்பூல் தாவர மையத்தில், வளர்ப்பு யானைகள் முகாம் அமைப்பது தொடர்பான அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன், அதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும்,'' என்றார்.