பைக் மோதி விபத்து
2 பேர் படுகாயம்
குளித்தலை, மே 26-
குளித்தலை அடுத்த, பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்., சேர்ந்தவர் மலையாளன், 46; கூலி தொழிலாளி. இவர், நேற்று, யமகா பைக்கில், கிருஷ்ணராயபுரம் சென்று விட்டு, கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பொய்கை புத்துார் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பள்ளப்பட்டியை சேர்ந்த ேஷக் பரீத், 38, என்பவர், ராயல் என்பீல்ட் புல்லட்டில் அதிவேகமாக வந்து, மலையாளன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து, புகார்படி லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வயலுார் பஞ்.,ல்
துாய்மை பணி
கிருஷ்ணராயபுரம், மே 26-
வயலுார் பஞ்சாயத்து வார்டுகளில், நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள், துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலுார் பஞ்சாயத்தில், சரவணபுரம், கோடங்கிப்பட்டி, வயலுார் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு சாலையோரங்களில் அதிகமான செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
பஞ்சாயத்து நிர்வாகம், நுாறு
நாள் திட்ட தொழிலாளர்களை
கொண்டு, கடைவீதி, அரசு அலுவலகம் வளாகம், ஆகிய இடங்களில் துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இப்பணிகளை பஞ்., நிர்வாகம் பார்வையிட்டது.
பூச்சி மருந்து குடித்த
வாலிபர் உயிரிழப்பு
குளித்தலை, மே 26-
குளித்தலை நெய்தலுார் பஞ்., சேர்ந்தவர் நல்லதம்பி, 32. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால், உடல்நிலை பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்தார்.
இதனால், தோட்டத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, நல்லதம்பியின் அண்ணன் மகாமுனி, 44, கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தேங்கி கிடக்கும் குப்பை
அகற்ற மக்கள் எதிர்பார்ப்பு
கரூர், மே 26-
கரூர், ராமகிருஷ்ணபுரம் சாலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக அதிகளவில் குப்பை தேங்கி கிடக்கிறது. இதை அகற்றாததால், அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், வங்கிகளுக்கு செல்லும் பொதுமக்கள், குவிந்து கிடக்கும் குப்பையை தாண்டி செல்லும்போது, முகம் சுளித்து செல்கின்றனர். மழை பெய்ததால் குப்பை அழுகி கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, குப்பை தேங்காதவாறு நாள்தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சாக்கடை கால்வாயை
துார்வார கோரிக்கை
கரூர், மே 26-
கரூர் அருகே, பசுபதிபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், கழிவுநீர் செல்ல போதுமான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆங்காங்கே குட்டைபோல் தேங்கியுள்ள கழிவுநீரில் கொசு உற்பத்தியாகிறது. கொசுக்கடியால் குழந்தைகள் துாங்க முடியாமல், மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சாக்கடை கால்வாய்களை உடனடியாக துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சீமை கருவேல மரம்
அகற்ற நடவடிக்கை
கரூர், மே 26-
வாங்கல் காவிரியாற்று பகுதியில், அதிகளவில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. ஏற்கனவே, காவிரியாறு தண்ணீர் இல்லாமல் பாலைவனம் போல் காணப்படுகிறது. கருவேல மரங்கள் அதிகளவில் முளைத்துள்ளதால், நிலத்தடி நீரும் குறைந்து விட்டது.
நீர்தேக்க கிணறுகளுக்கு போதிய தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. பல கிராமங்களுக்கு போதிய, காவிரி குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. எனவே, நீர்தேக்க கிணறு உள்ள இடங்களில், முளைத்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
மது விற்ற
2 பேர் கைது
குளித்தலை, மே 26-
திருச்சி மாவட்டம், சிறுக
மணியை சேர்ந்தவர் சிவக்குமார், 53. இவர், குளித்தலை, இனுங்கூர் டாஸ்மாக் அருகே செயல்பட்டு வரும் அரசு பாரில், மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தார்.
தகவலின்படி, குளித்தலை போலீசார் பாரில் சோதனை செய்து, சிவக்குமாரை கைது செய்தனர். இதேபோல் மதுவிற்ற, தங்கதுரை, 22, என்பவரை சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
களம் ஆக்கிரமிப்பு
விவசாயிகள் பாதிப்பு
கிருஷ்ணராயபுரம், மே 26-
மாயனுாரில், விவசாய களம் ஆக்கிரமிக்கப்பட்டு, சேதமாகியிருப்பதால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுாரில் விவசாயிகள் விளை பொருட்களை கொட்டி காய வைக்க களம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அறுவடை செய்யப்படும் நெல், சோளம், எள் ஆகிய தானியங்களை கொட்டி தரம் பிரிக்கப்
படுகிறது.
தற்போது, இந்த களம் ஆக்கிரமிக்கப்பட்டு, சுகாதார சீர்கேடாக உள்ளது. மேலும், ஆங்காங்கே சேதமாகி காணப்படுகிறது. விவசாயிகள் முழுமையாக களத்தை பயன்படுத்த முடியாத சூழ்
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, விவசாய களத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, சேதத்தை சரி செய்து விவசாயிகள் பயன்படுத்த ஏதுவாக தயார் செய்ய வேண்டும்.
கொடிக்கால் தெருவில்
குண்டும், குழியுமான சாலை
கிருஷ்ணராயபுரம், மே 26-
லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில், சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை காந்திசிலை முதல் நுாலகம் சாலை மற்றும் கொடிக்கால் தெரு வரை சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பஞ்., நிர்வாகம் சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் குழாய் சேதம்
பழுது நீக்கும் பணி
கிருஷ்ணராயபுரம், மே 26-
மத்திப்பட்டி சாலையில், சேதமான குடிநீர் குழாயை சரிசெய்யும் பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, புனவாசிப்பட்டி பிரிவு சாலையில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் நீர் ஏற்றி, மத்திப்பட்டி, பாலப்பட்டி, மேட்டுப்பட்டி கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திப்பட்டி சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வந்தது. இதனால் கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதில் தடை ஏற்பட்டது. தற்போது, சேதமான குடிநீர் குழாயை தொழிலாளர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும், குடிநீர் தடையின்றி செல்ல தேவையான பணிகள் செய்யப்பட்டன.
விஷம் குடித்த
தொழிலாளி விபரீதம்
குளித்தலை, மே 26-
குளித்தலை, ரங்கநாதபுரம் பஞ்., கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் தினகரன், 66; கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் காலை, 10:00 மணியளவில், கட்டளை காவிரி ஆற்றங்கரையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அங்கிருந்த மக்கள், தினகரனை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று மதியம், உயிரிழந்தார். இதுகுறித்து, மகன் முருகானந்தம், 22, கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.