பள்ளிபாளையம் அருகே களியனுார் அக்ரஹாரம் பஞ்.,சைச் சேர்ந்த விவசாயி, அரசின் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைத்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட நிதி கையாடல் செய்யப்பட்டதாக புகாரின் அடிப்படையில், நேற்று மீண்டும் அதிகாரிகள் நேரில் விசாரணை
செய்தனர்.
இதுகுறித்து எளையாம்
பாளையத்தைச் சேர்ந்த தனபால் கூறியதாவது:
ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், ஐந்து மாடுகள் வளர்க்க, எனது தந்தை சுப்ரமணி மாட்டு கொட்டகை, 2021ல் அமைத்தார். சம்மந்தப்பட்ட பயனாளிகளே இதை அமைத்து கொள்ள வேண்டும். இதற்கான கட்டுமான செலவு மற்றும் ஆட்கள் கூலியும், இந்த திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும். மாட்டு கொட்டகை கட்டியதற்கு, எனது தந்தைக்கு ஒதுக்கப்பட்ட நிதி, பினாமி பெயரில் கையாடல் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கடந்தாண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தேன். ஏற்கனவே, ஐந்து முறை மாவட்ட திட்ட இயக்குனர் அலுவலக அதிகாரிகள், ஊராட்சி அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வும், விசாரணையும் செய்தனர். நேற்று முன்தினம் மீண்டும் இரவு, 7:00 மணிக்கு அதிகாரிகள் மீண்டும் வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து விசாரணை தான் செய்கின்றனர், ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி இன்னும் கிடைக்கவில்லை. எனது தந்தைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக கிடைக்கவும், தவறு செய்த அதிகாரிகளை தண்டிக்கவும், கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.