ஈரோடு, திண்டல் சக்தி நகரை சேர்ந்தவர் ராசு மனைவி பாக்கியலட்சுமி,65. இவர், தனியாக வசிக்கிறார். இவரது வீட்டின் ஒரு பகுதியில் கடை அமைத்து வாடகைக்கு விட்டுள்ளார். அதில், திருநெல்வேலியை சேர்ந்த சேர்மராஜ்,45, மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் பூப்புனித நீராட்டு விழாவுக்காக கடந்த, 22ம் தேதி கடையை பூட்டிவிட்டு திருநெல்வேலிக்கு சென்றார். அதே நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாக்கியலட்சுமி கடந்த, 23ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று காலை பாக்கியலட்சுமி வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 1,000 ரூபாய் ரொக்கப்பணம், மூன்று கிராம் தோடு திருட்டு போனது தெரியவந்தது.
தவிர, சேர்மராஜின் மளிகை கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு, ஏழு ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் சில மளிகை பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் படி, ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.