அண்ணா தொழிற்சங்கம்
கொடியேற்று விழா
ஈரோடு: ஈரோடு, சேனாதிபாளையம் பகுதியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடந்த விழாவில், ஈரோடு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்து, தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர் கோவிந்தராஜன் வரவேற்றார். பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, ஜெகதீசன், தெய்வநாயகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
முருகன் கோவிலில்
தீ தடுப்பு ஒத்திகை
சென்னிமலை: சென்னிமலை தீயணைப்பு மீட்பு பணி நிலையம் சார்பாக சென்னிமலை முருகன் கோவிலில் பணியாற்றும் இந்து சமய அறநிலைய துறை பணியாளர்களுக்கு நேற்று சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவில் வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி வகுப்பு நடந்தது.
அவசர காலங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி தீயை அணைப்பது மற்றும் தீ விபத்து ஏற்படாமல் எப்படி தடுப்பது போன்ற பயிற்சியை, சென்னிமலை தீயணைப்பு நிலைய அலுவலர் துரை, தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை நடத்தி பயிற்சி வழங்கினர்.
ஈரோட்டில் 17 மி.மீ., மழை
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பதிவானது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 20 நாட்களுக்கு மேலாக பகலில் கடும் வெயிலும், மாலையில் மேகமூட்டமும், மழையும் நீடிக்கிறது. இதன்படி நேற்று முன்தினம் லேசான காற்றுடன் மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, ஈரோடு - 17 மி.மீட்டர், மொடக்குறிச்சி-15, குண்டேரிப்பள்ளம்-6, தாளவாடி-3 மி.மீட்டர் மழை பதிவானது.
சென்டர் மீடியன்
கற்களால் ஆபத்து
கோபி: கோபி-சத்தி சாலையில், காசிபாளையம் பஸ் ஸ்டாப்பில், பல மாதங்களுக்கு முன், விபத்தை தடுக்கும் வகையில், சென்டர் மீடியன் கற்கள் வைக்கப்பட்டது. அந்த கற்களை வாகன ஓட்டிகள் அறியும் வகையில், அதன் முன் இரும்பு பைப்பில், சிகப்பு விளக்கு பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், எச்சரிக்கை சிகப்பு விளக்கு கட்டமைப்பு சேதமடைந்துள்ளது. இதனால், கோவை பிரிவை கடந்து, சத்தியை நோக்கி செல்லும் வாகனங்கள், விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், அதன் கட்டமைப்பை புதுப்பிக்க, வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபி, நம்பியூர் தாலுகா
ஜமாபந்தியில் 243 பேர் மனு
கோபி: கோபி மற்றும் நம்பியூர் தாலுகாவில், நேற்று நடந்த ஜமாபந்தியில், 243 மனுக்கள் பெறப்பட்டன. கோபி உள்வட்டத்துக்கான ஜமாபந்தி, துணை கலெக்டர் குமரன் தலைமையில், கோபி தாலுகா ஆபீசில் நேற்று நடந்தது. மொத்தம், 125 மனுக்கள் பெறப்பட்டன. எலத்துார் உள்வட்டத்துக்கான ஜமாபந்தி, கோபி ஆர்.டி.ஓ., பழனிதேவி தலைமையில், நம்பியூர் தாலுகா ஆபீசில் நேற்று நடந்தது. மொத்தம், 118 மனுக்கள் பெறப்பட்டன.
'இல்லம் தேடி கல்வி' திட்டம்
அடையாள அட்டை வழங்கல்
கோபி: தமிழக அரசின் சார்பில், 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டம், கடந்த, 2021ல், டிச.,1 முதல், ஈரோடு உட்பட, 12 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி யூனியனில், 493 தன்னார்வலர்கள், 8,495 மாணவ, மாணவியர்களுக்கு போதிக்கின்றனர். அவர்களுக்கு சகல விபரமும் அடங்கிய, அடையாள அட்டை இல்லம் தேடி கல்வித்திட்டம் மூலம் வழங்கினர்.
பழைய ஓய்வூதிய திட்டம்
அமலாக்க கோரி ஆர்ப்பாட்டம்
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியம் சார்பில் மாவட்ட தலைவர் முரளீதரன் தலைமையில்
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த, 2003 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை கடந்த ஜன., 1 முதல் அமல்படுத்தி நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய ஒப்படைப்பு எனப்படும், ஈ.எல்., பணப்பயனை பெறும் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட துணை தலைவர் ரவீந்திரன், பாபுசங்கர், கோவிந்தன், செல்வராணி, ராதா, வெங்கிடுசாமி, மாநில துணை தலைவர் பிரேமா உட்பட பலர் பங்கேற்றனர்.
தியாகிகள் புகைப்பட கண்காட்சி
ஈரோடு: இந்திய விடுதலைக்காக பாடுபட்டவர்களில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிக்காவலர்கள் ஆகியோரின் உருவப்படங்கள் அடங்கிய கண்காட்சி, ஈரோடு கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் நடந்தது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கண்காட்சியை துவக்கி வைத்தார். இக்கண்காட்சி குறித்து எவருக்கும் தெரிவிக்கப்படாததால், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என யாரும் பார்வையிடவில்லை. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, மகளிர் திட்ட அலுவலர் கெட்ஸி லீமா அமாலினி ஆகியோர் பங்கேற்றனர்.
நிலத்தை மீட்டுத்தர
ஜமாபந்தியில் மனு
பவானி: பவானி தாலுகாவில், நேற்று நடந்த ஜமபந்தியில், செங்குந்தர் சமூகத்தினர், 50க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து, டி.ஆர்.ஓ., சந்திராவிடம் மனு வழங்கினர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது: எங்கள் சமூகத்திற்கு சொந்தமான, பவானி-அந்தியூர் பிரிவில், பாவடி திடலில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், எங்களால் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இந்த இடத்தை மீட்டு, பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், எங்கள் சமூகத்திற்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.
இலவச பட்டா கேட்டு
மாற்றுத்திறனாளி மனு
பவானி: பவானி அடுத்த ஓரிச்சேரிபுதுாரை சேர்ந்தவர் லட்சுமி, 64; மாற்றுத்திறனாளி. இவர், பவானி தாலுகாவில், நேற்று நடந்த ஜமாபந்தி முகாமில், இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு வழங்கினார். தொடர்ந்து அவர் கூறுகையில், ''இலவச வீட்டு மனை பட்டா வழங்க கேட்டு, பத்து முறை மனு கொடுத்துள்ளேன். இதுவரை யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என்றார். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, ''விரைவில் இவருக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.
வருவாய் துறையினர்
மரக்கன்று வழங்கல்
நவானி: பவானி தாலுகாவில் நடந்த ஜமபந்தி முகாமில், மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கு, வருவாய்த்துறையினர் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினர்.
பவானி தாலுகா அலுவலகத்தில், இரண்டாவது நாளாக நேற்று ஜமாபந்தி முகாம் நடந்தது.
இதில், ஜம்பை, ஓரிச்சேரி, புன்னம், ஆப்பக்கூடல், பவானி, ஆண்டிக்குளம், ஊராட்சிக்கோட்டை, மைலம்பாடி, வரதநல்லுார், தாளகுளம், சன்னியாசிபட்டி, பருவாச்சி பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், 148 மனுக்களை வழங்கினர். இதில் 20 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. அவர்களுக்கு, வருவாய்த்துறையினர் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினர்.
மாணவி மாயம்; தாய் புகார்
ஈரோடு, மே 26-
ஈரோட்டில், பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்த மாணவி மாயமானார்.
ஈரோடு, நடுமேடு, கெட்டிமுத்து நகர், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். ரயில்வேயில் பணி செய்கிறார். இவரது மனைவி சத்யா. இவர்களது மூத்த மகள் வேல்தர்ஸனி,18; ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து தேர்வு எழுதி உள்ளார். நேற்று முன்தினம் காலை வீட்டருகே உள்ள கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. தன் மகளை கண்டுபிடித்து தருமாறு, அவரது தாயார் சத்யா கொடுத்த புகாரின் படி, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கோபியில் வாலிபர் விபரீதம்
கோபி, மே 26-
கோபி அருகே காராத்தொட்டியை சேர்ந்தவர் சூர்யா, 20; உக்கரத்தில் உள்ள சவுண்ட் சிஸ்டம் கடையில் பணிபுரிந்தார். இவர் தான் பணிபுரிந்த கடையின் அருகே இருந்த குடோனில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு துாக்கிட்டு தொங்கினார். சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து சூர்யாவின் தந்தை, சிவலிங்கம், 45, கொடுத்த புகாரின்படி, இறப்புக்கான காரணம் குறித்து, கடத்துார் போலீசார் வழக்குப்
பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது
அந்தியூர், மே 26-
அந்தியூர் அருகே தாசலியூரை சேர்ந்தவர், செந்தில், 45; அதே பகுதியில் தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் குடியிருந்து வருகிறார். பணங்காட்டில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது குடிசை வீடு தீப்பிடித்துள்ளது. இதில், வீட்டில் இருந்த துணி, கட்டில் போன்றவை முற்றிலும் எரிந்து சாம்பலானது. அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.