காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் சேதமடைந்த மின்கம்பம் குறித்து பொதுமக்கள் 'வாட்ஸ் ஆப்' வாயிலாக அளித்த புகாரை தொடர்ந்து, காஞ்சிபுரம் நகர மின்வாரிய அதிகாரிகள், 24 மணி நேரத்திற்குள் பழைய கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பத்தை அமைத்தனர்.
காஞ்சிபுரம் நகரத்திற்கு உட்பட்ட பகுதியில், மின்தடை சார்ந்த பொது பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம், காஞ்சிபுரம் நகர உதவி செயற்பொறியாளர் இளையராஜன், Well Wishers to Kpm TNEB என்ற 'வாட்ஸ் ஆப்' குரூப் ஒன்றை கடந்த, 2017 நவம்பரில் துவக்கினார்.இந்த குரூப்பில் காஞ்சிபுரம் நகரத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தங்கள் பகுதியில் ஏற்படும் மின்தடை சார்ந்த மின் ஒயர் துண்டிப்பு, மின் கம்பம் சேதம், டிரான்ஸ்பார்மர் பழுது உள்ளிட்ட மின்தடை சார்ந்த பொது பிரச்னை குறித்து பதிவு செய்தால், மின்வாரியம் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, காஞ்சிபுரம் பி.எஸ்.கே., தெருவில் குடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்று சேதமாகியுள்ளது என தன்னார்வலர் ஒருவர், நேற்று முன்தினம் மாலை, 5:02 மணிக்கு, 'வாட்ஸ்ஆப்' குரூப்பில் பதிவு செய்து இருந்தார்.இதையடுத்து சிவ காஞ்சி பிரிவு மின் ஊழியர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து நேற்று மதியம், 1:45 மணிக்குள் பழைய மின் கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின் கம்பத்தை நடவு செய்தனர்.புகார் தெரிவித்த, 24 மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்பட்டு பழைய மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பத்தை அமைத்த காஞ்சிபுரம் நகர மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகளை பி.எஸ்.கே., தெரு வாசிகள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.