கரூர்:கம்பம் ஆற்றில் விடும் விழாவில் உள்ளே செல்ல அனுமதிக்காமல் தள்ளி விட்ட போலீசாரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்., ஜோதிமணி எம்.பி., 'பேரிகார்ட்டை' தாண்டி குதித்து, உள்ளே சென்றார்.
கரூர் மாரியம்மன் வைகாசி மாத உற்சவ திருவிழா, கடந்த 8ம் தேதி, கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை கம்பம் ஆற்றில் விடும் விழா நடந்தது.மாலை, 5:10 மணிக்கு கரூர் ஜவகர் பஜார், ஐந்து ரோடு வழியாக, இரவு, 7:25 மணிக்கு பசுபதிபாளையம் அமராவதி ஆற்றிற்கு கொண்டு செல்லப்பட்டது.
மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, எம்.பி., ஜோதிமணி உட்பட பலர் ஊர்வலத்தில் சென்றனர். விழாவிற்கு, ஆற்றில் இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் கம்பி வேலி சாய்ந்து விட கூடாது என்பதற்கு, அதற்கு முன் பேரி கார்டு வைக்கப்பட்டு இருந்தது. உள்ளே செல்ல பாஸ் வைத்திருந்தவர்களை கூட அனுமதிக்காமல், போலீசார் கெடுபிடி காட்டினர்.
அப்போது, கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணியை உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், போலீசாருக்கும், ஜோதிமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.'நான் எம்.பி., உள்ளே செல்ல அனுமதியுங்கள்' என, அவர் கூறியும், அதை போலீசார் காதில் வாங்கி கொள்ளாமல், ஒரு கட்டத்தில், ஜோதிமணியை தள்ளி விட்டனர்.இதனால், போலீசாருக்கும், அவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொறுமையை இழந்த ஜோதிமணி, போலீசாரின் எதிர்ப்பை மீறி, பேரிகார்ட்டில் ஏறிக் குதித்து உள்ளே சென்று கம்பம் விடும் நிகழ்ச்சியை பார்வையிட்டார்.