காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டோர் செலுத்திய 'டிபாசிட்' தொகையை இன்னும் வழங்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், பிப்., 19ம் தேதி நடந்தது. மொத்தம் 310 பேர் போட்டியிட்டனர். இதில் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு 'டிபாசிட்' தொகை 2,000 ரூபாய்; பொது பிரிவினருக்கு 4,000 ரூபாய் என அறிவிக்கப்பட்டது.தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்கள், வெற்றி பெற்றவர் பெற்ற ஓட்டுகளில் மூன்றில் ஒரு பங்கு ஓட்டு பெற்றிருந்தால், தாங்கள் செலுத்திய டிபாசிட் தொகையை திரும்ப பெறலாம்.
அந்த வகையில் 60 பேர் டிபாசிட் தொகை பெற தகுதி உள்ளனர்.தோற்றவர்கள், வாபஸ் பெற்றவர்கள் 'டிபாசிட்' பணத்தை, மாநகராட்சி இன்னும் வழங்கவில்லை என, தோற்றவர்கள் தெரிவித்தனர்.பெயர் வெளியிடாத மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:'டிபாசிட் தொகை பெற தகுதியுடைய நபர்களில், 42 பேர் மட்டும், 'டிபாசிட்' தொகை திருப்பி வழங்குமாறு மனு கொடுத்தனர்.அவர்களுக்கு அந்த தொகையை வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் மனு கொடுக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.