கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை குறித்த அளவீட்டில் வழங்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு, ஏமப்பேரில் உள்ள தனியார் நெல் அரவை ஆலை மற்றும் ரேஷன் கடையில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.அப்போது பொருட்களின் இருப்பு நிலை, பதிவேட்டில் உள்ளவாறு பொருட்கள் இருக்கிறதா. பொருட்கள் எடுத்துச் செல்லும் பதிவேடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ரேஷன் கடையில், புகார்களை தெரிவித்திட தொடர்புடைய தொலைபேசி எண்களையும், நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான சேவை எண்களையும், தகவல் பலகையில் ஒட்டிவைத்திட வேண்டும். கார்டுதாரர்களுக்கு பொருட்களை குறித்த அளவீட்டில் வழங்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு மற்றும் தனியார் நெல் அரவை முகவராக செயல்பட்டு வரும் ஏமப்பேர் தனியார் நெல் அரவை ஆலையின் அரவைத்திறன் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது, அரசு ஒப்பந்தப்படி, குறித்த காலத்திற்குள் தரமான அரிசியை வழங்கிடவும், அரவைத்திறனை திறம்பட மேற்கொள்ளவும் ஆலையின் மேலாளரிடம் அறிவுறுத்தினார். விழுப்புரம் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் பாலமுருகன், தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மனோகரன் உடனிருந்தனர்.