மதுரை: திருப்பரங்குன்றம் துர்கா காலனியில் அடிப்படை வசதிகள் கேட்டு முற்றுகையிட்ட மக்களிடம் கோரிக்கைகளை கேட்காமலேயே மேயர் இந்திராணி புறப்பட்டு சென்றார்.
மாநகராட்சி 97வது வார்டிற்குட்பட்ட இக்காலனியில் ரூ.25 லட்சத்தில் சுகாதார நல மையம் அமைக்க பூமி பூஜை மேயர் இந்திராணி தலைமையில் நேற்று நடந்தது. அங்கு வந்த அப்பகுதி மக்கள், 'நீங்கள் யார். என்ன பூஜை. எங்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை' என கேள்வி எழுப்பினர். சுகாதார நல மையம் அமைய போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 'இங்கிருந்து அரை கி.மீ., துாரத்தில் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையும், நிலையூர் ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளது. எங்களுக்கு அது போதும்' என்றனர்.
தொடர்ந்து பேசிய அவர்கள், 'இப்பகுதி கழிப்பறை 15 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பூட்டி கிடக்கிறது. கண்மாய்க்கரையை பெண்கள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள். சில ஆண்கள் மறைந்து நின்று வேடிக்கை பார்க்கின்றனர். எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. குடிநீர் வசதி இல்லை. ரோடு பராமரிப்பு இல்லை' என குமுறினர்.
பின்பு மேயர் காரை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அவர்களை கவுன்சிலர் சிவசக்தி, அதிகாரிகள் சமரசம் செய்தபோது, அதை பொருட்படுத்தாமலும், மக்களின் கோரிக்கைகளை கேட்காமலும் மேயர் புறப்பட்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.