கோவை:கோவை மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, தக்காளி விலை சரிவை தொட்டது.
கோவை சுற்றுப்புற பகுதி கிராமங்களில், தக்காளி வழக்கமாக அதிக அளவில் விளைவிக்கப் படும். கடந்த பருவத்தில் தக்காளி விவசாயிகளுக்கு, எதிர்பார்த்த அளவு விலையை கொடுக்காததால் அவர்கள் இந்த பருவத்தில் தக்காளி பயிரிடவில்லை.அதற்கு பதிலாக, சின்ன வெங்காயத்தை அதிக அளவு பயிரிட்டனர். விளைச்சலும் அதிகமாக கொடுத்ததால் சின்ன வெங்காயம் கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெங்காயத்தின் விலை குறைந்து, தக்காளியின் விலை உயர்ந்து விட்டது.கிலோ 120 ரூபாய் வரை விற்பனையானது. கோவையில் தக்காளிக்கு நல்ல கிராக்கி என்ற தகவல் பரவியதால், மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களிலிருந்து, அதிக அளவு தக்காளி கோவைக்கு விற்பனைக்கு வந்தது.
இதனால், கோவை எம்.ஜி.ஆர்.,மார்க்கெட்டில் விலை பாதியாக குறைந்தது. தற்போது நாட்டுத்தக்காளி கிலோ 70 ரூபாய்க்கும், ஆப்பிள் தக்காளி 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வியாபாரிகள் கூறுகையில், 'கோவையில் எப்போதும் இப்படித்தான் நடக்கும். எதற்கு அதிக விலையோ, அதை நோக்கி விவசாயிகள் செல்வர். அப்போது விளைச்சல் அதிகரித்து விலை சரிவைத்தொட்டு விடும்.
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை திட்டம் நம் விவசாயிகளிடையே இல்லை.அதே போல், விளைபொருளை சந்தைப்படுத்தும் தொழில் நுட்பம், இனியும் அவர்களிடம் முழுமையாக சென்றடையவில்லை. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் தக்காளி, வெங்காயம் இரண்டில் ஏதாவது ஒன்று, சரிவைத்தொட்டுக்கொண்டே இருக்கிறது.
இதற்கு வேளாண் பல்கலையிலுள்ள மேலாண்மைத்துறையோடு கலந்தாலோசித்தோ, கருத்தரங்குகள் வாயிலாகவோ விவசாயிகள் உண்மையான நிலையை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் தக்காளி மற்றும் வெங்காயத்திற்கு நிலையான விலை கிடைக்கும். வர்த்தகர்களுக்கும் விவசாயிகளுக்கும் இழப்பு ஏற்படாது.இவ்வாறு, வியாபாரிகள் கூறினர்.