கடலுார்:சாலை விபத்தில் இறந்த மாணவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர், நவநீதம் நகரைச் சேர்ந்தவர் சேகர் மகன் சிலம்பரசன், 17; கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். இவர், நேற்றிரவு 9:00 மணிக்கு நண்பர்களை ஏற்றிக் கொண்டு பைக்கில் சென்று கொண்டிருந்தார். போடிச் செட்டித் தெரு அருகில் வந்த போது, எதிரில் வந்த பைக் மீது மோதியது.
பலத்த காயமடைந்த சிலம்பரசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.தகவலறிந்த சிலம்பரசனின் உறவினர்கள் 75க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது. பின், மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் சிலம்பரசன் இறந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, ஸ்டெச்சரை அடித்து சேதப்படுத்தினர்.
அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.பின், 10:30 மணி முதல் 10;45 வரை மருத்துவமனை எதிரிலும், 10:50 மணி முதல் 11.05 வரை சவக்கிடங்கு எதிரிலும் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர் தலைமையிலான போலீசார் சமாதானம் செய்தனர். இதனால் மறியல் கைவிடப்பட்டது.
மறியல் காரணமாக கடலுார்-நெல்லிக்குப்பம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.விபத்து குறித்து கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.