இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:அவிநாசி ரோடு மேம்பாலத்தில் மொத்தமுள்ள, 10.10 கி.மீ., துாரத்துக்கு, 306 துாண்கள் அமைக்கப்படுகின்றன. இதில் தற்போது வரை, 266 துாண்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கட்டப்பட வேண்டிய, 305 மேல்தளங்களில், 20 தளங்கள் மேம்பாலத்தில் வைத்து முடிக்கப்பட்டுள்ளன. விமானநிலைய ஏறுதளம் அமைக்கும் பணியில், 6 துாண்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இப்பணியில், 6 சிறுபாலங்கள் மற்றும் பாலங்கள் அகலப்படுத்தப்பட்டும் மறுகட்டுமானமும் செய்யப்பட உள்ளன.
கே.எம்.சி.எச்., ஜி.ஆர்.ஜி.,பள்ளி, கிருஷ்ணம்மாள் கல்லுாரி, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் லட்சுமிமில்ஸ் பகுதிகளில், பாதசாரிகள் ரோட்டை கடக்க வசதியாக, சுரங்க நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளன. பணிகள் வேகமாக நடந்து வருவதால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டுமான பணிகள் நிறைவடையும். புதிய தொழில்நுட்பத்தின் மூலம், காரிடார்கள் மேல்தளங்களில் வைக்கப்பட்டு வருவதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவது குறைந்துள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
சிட்ரா அருகே உள்ள பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில், 13 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இதன் எதிரே உள்ள கண் மருத்துவமனைக்கு, தினமும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால் இந்த இடத்தில் சுரங்க பாதை கட்டாயம் தேவை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, இங்கு சுரங்க பாதை அமைக்க பூமி பூஜை போடப்பட்டு நிறுத்தப்பட்டது. இப்போது உயர்மட்ட மேம்பால கட்டுமான பணியிலும், இந்த இடத்தில் சுரங்கநடைபாதை இல்லாதது ஏமாற்றமாக உள்ளது.