மறைமலை நகர் : செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ - மாணவியர், மாநில அளவில் நடந்த 17 வயதுக்கு உட்பட்ட 'ரோலர் ஸ்கேட்டிங்' கூடைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்று, பதக்கங்களை வென்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில், பண்ணை மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், கடந்த 21, 22 ஆகிய தேதிகளில், மாநில அளவிலான 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து போட்டி நடந்தது.சென்னை, செங்கல்பட்டு உட்பட, பல மாவட்டங்களில் இருந்து 35க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் நடந்த போட்டிகளில், அதிக புள்ளிகள் பெற்ற அணிகள், இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. மொத்த புள்ளிகளின் அடிப்படையில் கோவை அணி முதல் இடத்தையும், செங்கல்பட்டு அணி இரண்டாவது இடத்தையும், மதுரை அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.பதினான்கு வயதுக்கு உட்பட்டோருக்காக நடத்தப்பட்ட பெண்களுக்கான போட்டியில், செங்கல்பட்டு பெண்கள் அணி தங்கப்பதக்கமும், ஆண்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில், செங்கல்பட்டு ஆண்கள் அணி வெள்ளி பதக்கமும் கைப்பற்றின.
அதேபோல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், செங்கல்பட்டு ஆண்கள் அணி வெள்ளியும், 11 வயதோருக்கான போட்டியில், செங்கல்பட்டு ஆண்கள் அணி வெண்கல பதக்கமும் பெற்றன.செங்கல்பட்டு அணியில், வெற்றி பெற்ற செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் இருந்தனர்.
தமிழக அணி சார்பில் 11 வயதில் நான்கு பேரும், 14 வயது ஆண்கள் அணியில் ஆறு பேரும்; பெண்கள் நான்கு பேரும், 17 வயது ஆண்கள் அணியில் ஆறு பேரும், ஹரித்வாரில் ஜூன் 22 முதல் 26ம் தேதி வரை நடக்கவுள்ள தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.