கொரட்டூர் : ரவுடி கும்பல் கோஷ்டி மோதலில் இருவரை தீர்த்துக்கட்டும் திட்டத்துடன், ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில், இந்த மாதத்தில் மட்டும் முன் விரோதம் காரணமாக ௧௯ பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழக காவல் துறை உஷார் படுத்தப்பட்டது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை பயணம் காரணமாக, போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.ஆவடி, காமராஜ் நகரை சேர்ந்த பிரகாஷ் தளபதி, 27; புழல், லட்சுமிபுரத்தை சேர்ந்த மற்றொரு பிரகாஷ், 26; புத்தகரம், கிரேஸ் நகரை சேர்ந்த ஜெயகுமார், 20; வில்லிவாக்கம், பாரதி நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன், 29; ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, செம்பியம் காந்தி சிலை அருகே, தங்களது கூட்டாளிகளுக்காக காத்திருந்தனர்.
அப்போது, அவர்களுக்கும், அந்த பகுதியை சேர்ந்த, ஆட்டோ டிரைவர் சீனா, 27, என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, சீனா தனது நண்பர் தினேஷ் என்பவர் உட்பட, 10 பேரை அழைத்து வந்து, மேற்கண்ட நால்வரையும், சரமாரியாக தாக்கி உள்ளனர்.அங்கிருந்து தப்பி சென்ற நால்வரும், சீனா மற்றும் தினேஷ் ஆகியோரை வெட்டிக் கொல்ல திட்டமிட்டனர். தங்களுக்கு துணையாக, பெரம்பூர், செங்கல்வராயன் தெருவை சேர்ந்த ஈசாக், 22; ஆவடி, திருமுல்லைவாயலை சேர்ந்த கிருஷ்ணகுமார், 19; வில்லிவாக்கம், பாரதி நகரை சேர்ந்த ஐசக் ராபர்ட், 19; ஆகியோரை சேர்த்துக்கொண்டனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, கண்காணிப்பு பணியில் இருந்த கொரட்டூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு, கொலை சதி திட்டத்துடன் ரவுடி கும்பல் பதுங்கி இருப்பது குறித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், கொரட்டூர் அடுத்த மாதனாங்குப்பம், பஜனை கோவில் தெருவில், ரவுடிகள் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கிருந்த ஏழு பேர் கும்பலை கைது செய்தனர். கொலை திட்டத்துக்காக அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆசிட், 10 பட்டா கத்தி, 5 மோட்டார் சைக்கிள்கள், ஒன்பது மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.