திருவேற்காடு : கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டவரின் உடல் பாகங்களை போலீசார் தேடி அலைகின்றனர்.
திருவேற்காடு அடுத்த பாரிவாக்கம் ஊராட்சி, கண்ணப்பாளையம் சாலையில் உள்ள குப்பை கிடங்கில், நேற்று முன்தினம் காலை, எரிந்து, சிதைந்த நிலையில், ஆண் சடலம் கிடந்தது.திருவேற்காடு போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அந்த சடலத்தை எரிப்பதற்கு முன், அதில் இருந்த தலை மற்றும் கைகள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
கொலையாகி கிடந்தவர், 30 வயது மதிக்கத்தக்க நபராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அவர் யார் என்ற விபரம், இதுவரை போலீசாருக்கு கிடைக்கவில்லை.இந்த நிலையில், மதுரவாயல், பூந்தமல்லி, ஆவடி, திருவள்ளூர் சுற்றுவட்டாரத்தின், ஏதாவது ஓரிடத்தில், மர்ம நபர்கள், அந்த நபரை கொலை செய்து, கோணியில் கட்டி எடுத்து வந்து, மேற்கண்ட இடத்தில், குப்பையுடன் சேர்த்து எரித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதன்படி, சென்னை சுற்றுவட்டாரங்களில், 30 வயதிற்குள் காணாமல் போனவர்களின், புகார் பட்டியல் சேகரிக்கப்படுகிறது.மேலும், முன் விரோத மோதல் குறித்த புகார்கள் மீதான விசாரணை நிலை குறித்தும், தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். இது தவிர, சுற்றுவட்டாரங்களில் உள்ள, தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களின் விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன.
சடலம் கிடந்த இடத்திற்கு, வாகனங்கள் வந்து செல்லும், காடுவெட்டி முதல் மேட்டுப்பாளையம் வரையிலான சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்த வகையில், 24ம் தேதி இரவு முதல் 25ம் தேதி அதிகாலை வரை, அந்த சாலையில் பயணித்த வாகனங்களின் பட்டியலும் சேகரிக்கப்படுகிறது.விசாரணையின் முக்கிய அம்சமாக, சடலத்தில் இருந்து வெட்டப்பட்ட தலை, கைகளை ஆறு, குளம், பாலம் ஆகியவற்றில், போலீசார் தேடி வருகின்றனர்.