வடவள்ளி:வடவள்ளி மற்றும் மருதமலை பகுதியில் கனமழை பெய்தபோது, மரம் வேருடன் சாய்ந்தது.
வடவள்ளி, மருதமலை, சுண்டப்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று பகல் திடீரென கனமழை பெய்தது. பலத்த இடி மற்றும் காற்றுடன், சுமார் ஒரு மணி நேரம், கனமழை பெய்தது. இதில் சாலையில், பல இடங்களிலும் மழை நீர் தேங்கியது. மழையின் போது, வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலையில், சாலையோரத்தில் இருந்த மேபிளவர் மரம் வேரோடு சாய்ந்து, சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது, வாகனங்கள் எதுவும் செல்லாததால், அசம்பாவிதம் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி பணியாளர்கள், விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொம்மணம்பாளையம், மதுரைவீரன் தெருவில் உள்ள ஆலமரத்தின் கிளை முறிந்து, அருகில் இருந்த வீட்டின் மேல் விழுந்தது. அந்த வீட்டின் ஓடுகள் சேதமடைந்தன.