மேட்டுப்பாளையம்:"மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட பணிகளில் அஜாக்கிரதை கூடாது," என, உதவி செயற்பொறியாளர் காளீஸ்வரி பேசினார்.
மேட்டுப்பாளையம் மின்சார கோட்ட பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு, காரமடை அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கோவை வடக்கு மின் வாரிய உதவி செயற்பொறியாளர்(பாதுகாப்பு) காளீஸ்வரி பேசுகையில், ''மின் வாரிய ஊழியர்கள், பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாது பணியில் ஈடுபடுவதால் விபத்து ஏற்படுகிறது.
டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட பணிகளில் அஜாக்கிரதை கூடாது. நகரின் பெரும்பாலான இடங்களில், மின் கம்பிகள் கீழே தொங்குவதாக புகார்கள் வருகின்றன. அந்த இடங்களை ஆய்வு செய்து கம்பிகளை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கலங்கிய மனநிலையோடும், மொபைல் போன் பேசிக்கொண்டும், எக்காரணத்தை கொண்டும் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, மின் விபத்தால் ஊழியர் உயிரிழப்பு, அலட்சியத்தால் நிகழும் அசம்பாவிதம் உள்ளிட்டவை குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேட்டுப்பாளையம் மின்சார வாரிய செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.