கோவை:கோவையில், நொய்யல் நீர் வழித்தடத்தில் வாய்க்காலில் பல்வேறு இடையூறுகள் இருப்பதால், குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கலான சூழல் இருக்கிறது.
வெள்ளப்பெருக்கு ஏற்படும் முன், நீர் வழங்கு வாய்க்கால்களை, மாநகராட்சியும் பொது பணித் துறையும் இணைந்து தயார்படுத்த வேண்டும்.ஜூன் 1ல் தென்மேற்கு பருவ மழை துவங்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. ஆனால், 10 நாட்களுக்கு முன்னதாகவே, மழை பெய்ய ஆரம்பித்து விட்டது.
மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் கன மழை காணப்படுகிறது. சிறுவாணி அணைக்கும் நீர் வர துவங்கியிருக்கிறது.செப்., வரை பருவ மழை காலம். மழைப்பொழிவு தொடர்ந்தால், நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். நொய்யல் வழித்தடத்தில் உள்ள அணைக்கட்டுகள் மற்றும் குளங்களை தயார்படுத்தி வைத்திருந்தாலும், நீர் வழங்கு வாய்க்கால்கள் துார்வாரப் படாமல் இருப்பதால், செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது
பேரூர் படித்துறையை கடந்து வரும் தண்ணீர், சேத்துமா வாய்க்காலில் பயணித்து, உக்கடம் பெரிய குளத்துக்கு வர வேண்டும். கரை பலவீனமாக இருப்பதால், கடந்தாண்டு கன மழை பெய்தபோது, செல்வபுரம் எல்.ஐ.சி., காலனி, முத்துசாமி காலனி மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சென்றது.
இதையடுத்து, வாய்க்காலை துார்வாரி, கரையின் இருபுறமும் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்ட திட்டமிடப்பட்டது. இதில், ஆங்காங்கே தடுப்பு சுவர் கட்டுப்பட்டு, அரைகுறையாக விடப்பட்டிருக்கிறது. தற்போது நாணல் புற்கள் முளைத்து புதர்மண்டி இருக்கிறது. வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளும் கொட்டப்பட்டு இருக்கின்றன. ஆக்கிரமிப்பு வீடுகளும் அகற்றப்படாமல் இருக்கின்றன. இதனால், பெரிய குளத்துக்கு நீர் வரத்து தடைபடும் சூழல் காணப்படுகிறது.
வாலாங்குளம் சிக்கல்
வாலாங்குளத்தின் உபரி நீர் காந்தி நகர், மசால் லே-அவுட், போலீஸ் கந்தசாமி லைன் வீதி வாய்க்கால் வழியாக புலியகுளம் சென்று, சங்கனுார் பள்ளத்தில் கலக்க வேண்டும்.மழை நீர் வடிகாலை துார்வாராததால், கழிவு மண் தேங்கி, அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்தாண்டு பருவ மழை பெய்தபோது, வாலாங்குளம் உபரி நீர் செல்ல வழியின்றி, திருச்சி ரோட்டில் மழை நீர் வடிகால் வழியாக ராமநாதபுரம் கொண்டு சென்று, சங்கனுார் பள்ளத்தில் சேர்க்கப்பட்டது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, அமைச்சர் செந்தில் பாலாஜி, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். சுங்கத்தில் இருந்து சங்கனுார் பள்ளம் வரை, 2,100 மீட்டர் நீளத்துக்கு, வெள்ள நீர் வெளியேற்ற வடிகால் கட்டுவதற்கு, ரூ.9 கோடிக்கு மாநகராட்சி மதிப்பீடு தயாரித்தது. ஓராண்டாகி விட்டது; இன்னும் வேலை நடக்கவில்லை. மழை நீர் வடிகால் துார்வாரப்படாமலும் இருப்பதால், வாலாங்குளத்தின் உபரி நீர் செல்ல வழியில்லாத சூழல் இன்று வரை நீடிக்கிறது.
பாலத்தால் இடையூறு
வெள்ளலுார் ராஜவாய்க்கால் குறுக்கே, ஆத்துப்பாலம் பகுதியில், உக்கடம் மேம்பாலத்தின் இறங்கு தளம் கட்டும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்கிறது. வாய்க்கால் குறுக்கே துளையிடப்பட்டு துாண்கள் கட்டப்பட்டு, ஓடுதளம் அமைக்கப்படுகிறது.
இதேபோல், நஞ்சுண்டாபுரம் இட்டேரி பகுதியில் பொள்ளாச்சி மெயின் ரோட்டின் குறுக்கே கான்கிரீட் பாலம் கட்டப்படுகிறது.இதற்காக, வாய்க்கால் குறுக்கே குவியலாக மண் போட்டு மூடப்பட்டிருக்கிறது. பாலம் வேலைகள் ஆமை வேகத்தில் நடப்பதால், நொய்யலில் தண்ணீர் வரும்போது, வெள்ளலுார் குளத்துக்கு கொண்டு செல்வது தடைபடும்.
எனவே, வேலையை விரைவுபடுத்தி, அணைக்கட்டு பகுதியில் இருந்து குளத்துக்கு செல்லும் நீர் வழித்தடங்களில் உள்ள அடைப்புகளை நீக்கி, துார்வாரி, வாய்க்கால்களை தயார்படுத்த வேண்டும்.கூடுதுறையில் துவங்கி, நொய்யல் ஆற்றின் நீர் வழித்தடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.