ஊட்டி,:ஊட்டி நகரில் நேற்று ஒரு மணிநேரம் பெய்த கனமழையின் போது, தாவரவியல் பூங்கா சாலையில் துர்நாற்றத்துடன் கழிவுநீர் ஓடியதால், சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.
ஊட்டியில் மலர் கண்காட்சி நிறைவுபெற்றாலும், தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையவில்லை. இந்நிலையில், நேற்று, 12:30 மணி முதல் நகரில் கனமழை பெய்தது. அப்போது, தாவரவியல் பூங்கா சாலையில், பழங்குடியினர் பண்பாட்டு மையத்தின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை அடைப்பட்டு, கழிவுநீர் வெளியேறியது.
மழை நீருடன், கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால், சுற்றுலா பயணிகள், பூங்காவுக்கு செல்லாமல், வாகனங்களில் ஏறி வேறு பகுதிக்கு சென்றனர்.
கடந்த, 21ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த, ஊட்டியின் முதல் கலெக்டர் சல்லிவன் சிலை அருகே, கழிவுநீர் தேக்கம் ஏற்பட்டது.சமீபத்தில் தான் அப்பகுதி, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. எனினும், கழிவு நீர் தேக்கம் ஏற்பட்டதால், உள்ளூர் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
மக்கள் கூறுகையில்,'இப்பகுதியில் கனமழை வரும் போது, வீடுகள், சுற்றுலா ஓட்டல், காட்டேஜ்களில் இருந்து மொத்தமாக அடித்து வரப்படும் கழிவுகளால், சாக்கடை அடைப்பட்டு வெளியேறும் கழிநீர் சாலையில் ஓடுகிறது. பல ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.