முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கிணத்துக்கடவு அரசு உயர்நிலைப்பள்ளியில், 1972ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த, 45 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி படிப்பு முடிந்து, 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நடந்த பொன் விழாவில், பேராசிரியர் மனோகரன் வரவேற்றார்.இதில், முன்னாள் ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் மாணவர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டு பேசினர். ஒருவருக்கொருவர் பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கான ஏற்பாட்டினை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக பாஸ்கரன், சுப்ரமணியன், கிருஷ்ணசாமி, மணிமாறன் ஆகியோர் செய்திருந்தனர்.
அடிப்படை வசதிகளில்லை
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பொதுமக்கள் பொள்ளாச்சி சப் - கலெக்டரிடம் அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி, நல்லுாத்துக்குளி அருந்ததியர் காலனியில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இங்கு, மயான வசதியில்லை. இடவசதியில்லாத மயானத்தில், இறந்தவர்களின் உடல்களை அடுக்கடுக்காக புதைக்கும் அவல நிலை உள்ளது.ஒரே நாளில், இரண்டு உடல்களை புதைப்பது மிகப்பெரிய சிரமமாக உள்ளது. மழைக்காலங்களில் சடலங்கள் நீரில் மிதக்கும் நிலை உருவாகியுள்ளது. உடனடியாக வருவாய்துறை வாயிலாக உரிய நில அளவை செய்து, மயான வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும், பொதுக்கழிப்பிட வசதியில்லாததால், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சிரமப்படுகின்றனர். சிமென்ட் சாலை அமைக்கவில்லை. போதுமான வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு தளவாட பொருட்கள்
வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கை வசதி இல்லை. இதனால், மாணவர்கள் அவதிப்பட்டனர்.இதனை தொடர்ந்து, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டெஸ்க், பிரோ உள்ளிட்ட பொருட்களை தலைமை ஆசிரியர்கள் சிவன்ராஜ், ராபின்சன் ஆகியோரிடம் எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி வழங்கினார். எம்.எல்.ஏ., பேசுகையில், ''பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்து தரப்படும். வகுப்பறையின் மேற்க்கூரை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.நிகழ்ச்சியில், அ.தி.மு.க., நகர செயலாளர் மயில்கணேஷ், அவைத்தலைவர் பாலு, நகராட்சி கவுன்சிலர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவிலில் சமூக கூட்டம்
பொள்ளாச்சி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருமண மண்டபத்தில், கோவில் அறங்காவலர்களை தேர்வு செய்யும் வகையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனரின் ஆணையின்படி சமூக கூட்டம் நடந்தது. கிருஷ்ணபாரதி, கருணாகரன், தண்டபாணி, பூபதி நாராயணன், கவுந்தி, பாலசுப்பிரமணியம் ஆகியோரை ஏக மனதாக தேர்வு செய்து, அறங்காவலர்களாக நியமிக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், உயர்கல்வி படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கேரளா சமாஜ ஆண்டு விழா
பொள்ளாச்சி தாலுகா, கேரளா சமாஜத்தின் ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, கேரளா சமாஜம் மண்டபத்தில் நடந்தது. தமிழ்நாடு மலையாளிகளின் கூட்டமைப்பின் தலைவர் சோமன் மேத்யூ தலைமை வகித்தார். தொடர்ந்து பதவியேற்று விழா நடந்தது. அதில், சமாஜத்தின் தலைவராக சோமன் மேத்யூ, செயலாளராக வாசுதேவன், பொருளாளராக சிவக்குமார் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், வாரம் இரு நாட்கள், 100 நோயாளிகளுக்கு உணவு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
30 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு
வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த, 1992 - 1993ம் ஆண்டு படித்த, கணிதப்பிரிவு முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமை வகித்தார்.விழாவில் கணிதப்பிரிவு அப்போதைய ஆசிரியரும், வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியருமான ராபின்சனுக்கு, முன்னாள் மாணவர்கள் நினைவு பரிசு வழங்கினர்.விழாவில், தலைமை ஆசிரியர் ராபின்சன் பேசும்போது, ''அரசு பள்ளி மாணவர்கள் உயர்ந்த நிலைக்கு கொண்டு வர பாடுபட்ட ஆசிரியர்களை, வாழ்க்கையில் மாணவர்கள் ஒரு போதும் மறக்க கூடாது. ஆண்டுகள் பல கடந்தாலும் படித்த பள்ளியையும், ஆசிரியர்களையும் மறக்காமல் பாராட்டு விழா நடத்தியது மிகவும் பெருமையாக உள்ளது,'' என்றார்.
ஆதரவற்றோருக்கு மாணவர்கள் உதவி
பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியின் முதுகலை பட்டபடிப்பு (எம்.காம்.,) மாணவர்கள், ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி சுற்றுலா செல்லும் இவர்கள், சுற்றுலா சென்று வந்த உடன் செலவு போக மீதம் உள்ள தொகையை, கல்லுாரி நிர்வாகம் மாணவர்களிடம் திருப்பி கொடுத்துள்ளது. அந்த பணத்தை செலவு செய்யாமல், மாற்றி யோசித்த மாணவர்கள், அதனை குளிரில் வாடும் ஆதரவற்ற, 50 முதியவர்களுக்கு உதவி செய்ய திட்டமிட்டனர். பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் மற்றும் சப் - கலெக்டர் அலுவலகம் அருகே வசிக்கும் ஆதரவற்றோருக்கு போர்வை, ரொட்டி வழங்கினர். இந்த நிகழ்வை, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் பேரவை தலைவர் நடராஜ் துவக்கி வைத்தார். கல்லுாரி மாணவர் கள், ஆதரவற்றோருக்கு பொருட்களை வழங்கினர்.