திருப்பூர்:திருப்பூர் டிப்போவில் இருந்து ஈரோடு, சேலத்துக்கு இயக்கப்படும் பஸ்கள், அவற்றின் படிக்கட்டுகள் ஆட்டம் காணுவதால், பஸ்சில் ஏறும் பயணிகளுக்கு அச்சம் உண்டாகிறது.
திருப்பூரில் ஊத்துக்குளி, விஜயமங்கலம் வழியாக ஈரோட்டுக்கு இயக்கப்படும் அரசு பஸ் (டி.என்., 39 என் 0145) பின்புற படிக்கட்டு உடைந்துள்ளது. இருபுறமும் கைப்பிடி அருகே, இணைப்பு துண்டாகி விட்டதால், விரிசல் ஏற்பட்டு, படிக்கட்டு தனியே தொங்கியபடி உள்ளது; பயணிகள் பஸ்சில் ஏறும் போது ஆட்டம் காண்கிறது.'பீக் ஹவர்ஸில்' ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து பேர் நின்றால், அப்படியே பயணிகளுடன் பஸ் இயங்கும் போதே கழன்று விடும் அபாயம் உள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து சேலத்துக்கு இருமுறையும், திருப்பூர் - சேலம் இடையே நாள் முழுதும் அரசு பஸ் (டி.என்., 38 என் 3308) இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் 'லாக்கிங் சிஸ்டம்' பழுதாகி விட்டது.இது தொடர்பாக, நடத்துனர் டிப்போவில் புகார் தெரிவித்தும், 'லாக் புக்'கில் எழுதி வைத்தும் மாதக்கணக்கில் சரிசெய்து தரப்படவில்லை. கதவை கயிறு போட்டு இழுத்து கட்டி வைத்துள்ளனர்.
இரவு நேரத்தில் பஸ் இயங்கும் போதும், மழைகாலங்களில் கதவை மூட பயணிகள் நடத்துனரிடம் வற்புறுத்துகின்றனர். ஆனால், கதவை மூடினால் மீண்டும் திறக்க முடியாது என்பதால், கயிறின் துணையுடன் பயணம் தொடர்கிறது.திருப்பூரில் இருந்து இயக்கப்படும் பாடாவதி பஸ்கள் குறித்து அவ்வப்போது ஆர்.டி.ஓ., க்கள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து, பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.