அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணி துவக்கம்; ரூ.70 கோடியில் 2.4 கி.மீ., விரிவாக்கம் | சென்னை செய்திகள் | Dinamalar
அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணி துவக்கம்; ரூ.70 கோடியில் 2.4 கி.மீ., விரிவாக்கம்
Updated : மே 27, 2022 | Added : மே 27, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
 

செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீரால், அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில், 2.4 கி.மீ., துாரத்திற்கு, 70 கோடி ரூபாய் செலவில் ஆற்றை அகலப்படுத்தும் பணி பூமி பூஜையுடன் நேற்று துவங்கியது. இப்பணி நிறைவடைந்தால், 40 ஆயிரம் கன அடி தண்ணீர் எளிதாக வெளியேறும்.latest tamil newsகாஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரத்தை அடுத்த ஆதனுார் ஏரி கலங்கல் பகுதியில் இருந்து துவங்கும் அடையாறு ஆறு, மண்ணிவாக்கம், வரதராஜபுரம், முடிச்சூர், திருநீர்மலை, அனகாபுத்துார், காட்டுப்பாக்கம், மணப்பாக்கம் வழியாக பயணித்து, சென்னை பட்டினப்பாக்கம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.ஆற்றின் மொத்த நீளம், 42 கி.மீ., ஆக உள்ள நிலையில், வரைபட அளவின் படி, ஆற்றின் அகலம் ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றார்போல், 60 முதல் 200 அடி என்ற அளவில் உள்ளது.

கரையோரங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதன் விளைவாக, இதன் அகலம் 20 முதல் 100 அடியாக சுருங்கியது.இதனால், பரவலாக மழை பெய்தாலே ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும். 2015ல் பெய்த கன மழையில், ஆற்றில் அதிகபட்ச அளவை காட்டிலும், 10 அடி உயரத்திற்கு வெள்ளம் ஓடியது. இதனால், ஆற்றங்கரையை ஒட்டியுள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. முடிச்சூர், வரதராஜபுரம், தாம்பரம் பகுதிகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின.

அப்போது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகப்படியாக, 29 ஆயிரத்து 600 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் கால்வாய், அடையாறு ஆற்றில் சேரும் இடத்தில், ஆற்றின் அகலம், 129 அடியாகவும், திருநீர்மலை பாலம் கடக்கும் இடத்தில், 186 அடியாகவும் உள்ளது.

இந்த ஏற்ற இறக்கமே, ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதனால், ஆற்றை முழுமையாக அகலப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


இப்பிரச்னை குறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. இதையடுத்து, 2016ல், ஆதனுார் முதல் மணப்பாக்கம் வரை, 22 கி.மீ., துாரத்திற்கு, 19 கோடி ரூபாய் செலவில், அடையாறு ஆற்றை அகலப்படுத்தி, ஆழப்படுத்தினர். அப்படியிருந்தும், பல இடங்களில் குறைந்த அகலத்திலேயே உள்ளது. அதனால், கடந்த ஆண்டு பருவமழையின் போது, கிளை கால்வாய்கள் வழியாக வந்த தண்ணீர் தடைப்பட்டு, வழக்கம்போல் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
இப்பிரச்னையை கருத்தில் கொண்டு, திருநீர்மலை முதல் அனகாபுத்துார் வரை, 2.4 கி.மீ., துாரத்திற்கு, 70 கோடி ரூபாய் செலவில், அடையாறு ஆற்றை அகலப்படுத்த திட்டமிடப்பட்டது.தொடர்ந்து, அப்பணிக்கான பூமி பூஜை, நேற்று நடந்தது. இதில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.20 ஏக்கர் தேவைஅடையாறு ஆற்றில், செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் கால்வாய் சேரும் இடத்தின் இடது பக்க கரையை ஒட்டி, தரிசு நிலம் உள்ளது. அப்பகுதியில், நிலத்தை கையகப்படுத்தி ஆற்றை அகலப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில், 20.42 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
இதற்கான ஆய்வுகள் நடந்து வருவதால், விரைவில் நிலம் கையகப்படுத்தும் பணி முடியும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துஉள்ளனர். ஆற்றை அகலப்படுத்தும் போது, இடது புறத்தில் 3,600 அடி துாரத்திற்கும், வலது புறத்தில், 600 அடி துாரத்திற்கும், 16.5 அடி உயரத்திற்கு சிமென்ட் தடுப்பு கட்டப்பட உள்ளது.தடையின்றி வெளியேற வாய்ப்புஇது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
மழை அதிகமாக இருக்கும் போது, செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறந்தால், அதன் வேகம் அதிகமாக இருக்கும். அப்போது, அடையாறு ஆற்றில், உபரி நீர் மட்டுமே செல்லும்.முடிச்சூர், தாம்பரம் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் தடைப்பட்டு, பின்நோக்கி செல்லும்.
இதனால், குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. ஒவ்வொரு மழைக்கும், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதற்கு இதுவே காரணம். அடையாறு அகலப்படுத்தப்பட்டால், அதில் 40 ஆயிரம் கன அடி நீர் செல்லும். இதனால், வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பே இருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X