திருப்பூர்:''தொழில்நுட்ப தேவை தொடர் பான பரிந்துரைகள், உடனடியாக செயல்வடிவம் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது'' என்று ஜவுளி தொழில்நுட்ப ஆலோ சனைக்குழுவில் இடம் பெற்றுள்ள திருப்பூரை சேர்ந்த தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கூறினர்.
தமிழக துணி நுால் துறை அமைச்சர் காந்தி, மானிய கோரிக்கையில் அறிவித்தபடி, ஜவுளி தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்படுகிறது. ஜவுளி தொழில் அமைப்பு பிரதிநிதிகள் 16 பேர் குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம், சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் என, பின்னலாடை நகரான திருப்பூரை சேர்ந்த நான்கு பேர் ஆலோசனைக்குழுவில் இடம்பெறுகின்றனர். விரைவில் இந்த குழு அமைக்கப்பட்டு, செயல்பாட்டை துவக்க உள்ளது.
குழு பணிகள்
சென்னையை தலைமையிடமாக கொண்டு, அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிரந்தர குழுவாக இயங்கும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைக்கு ஏற்ப குழு கூடும். நுாற்பாலை, ஆயத்த ஆடை, பின்னலாடை, தொழில்நுட்ப ஜவுளி என ஜவுளித்துறையின் பல்வேறு பிரிவுகள் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து, பிரச்னைக்குரிய தீர்வுகள்; தொழில்நுட்ப ஆலோசனைகளை அரசுக்கு பரிந்துரைக்கும்.
தொழில்நுட்பம்
'பியோ' தலைவர் சக்திவேல்:ஜவுளித்துறை வளர்ச்சிக்கு தொழில்நுட்ப மேம்பாடு முக்கியமானதாக உள்ளது. தற்போது கூட, சுத்திகரிப்பு மைய கழிவு உப்புகளை அகற்றுவதற்கான தொழில்நுட்பம் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.ஆலோசனை குழு மூலம், ஜவுளித்துறையின் தொழில்நுட்ப தேவைகளை, விரைவாகவும், நேரடியாகவும் அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லமுடியும். குழுவின் ஆலோசனைகள், பரிந்துரைகளுக்கு அரசு செயல்வடிவம் கொடுக்கும். இதன்மூலம், நுாற்பாலை முதல் ஆயத்த ஆடை தயாரிப்பு வரையிலான தமிழக ஜவுளித்தொழில் சிறப்பான வளர்ச்சி பெறும்.
முக்கியத்துவம்
'சைமா' தலைவர் ஈஸ்வரன்:அமைச்சர் அறிவித்தபடி, துரிதமாக, ஜவுளித்துறைக்கான ஆலோசனை குழு அமைப்பது வரவேற்கத்தக்கது. ஜவுளி தொழிலின் கஷ்ட, நஷ்டங்களை அன்றாடம் எதிர்கொண்டிருக்கும், ஜவுளி தொழிலில் ஈடுபட்டுள்ளோர், உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குழுவுக்கு, தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும்; பரிந்துரைகளை விரைந்து நிறைவேற்றி வைப்பதிலேயே, குழுவின் வெற்றி அடங்கியிருக்கிறது.
தொலைநோக்கு
ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம்:தமிழக அரசு முதல் முறையாக, தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவை அமைப்பது பாராட்டத்தக்கது. இந்த குழு மூலம், திருப்பூர் மீதான அரசின் கவனத்தை ஈர்க்கமுடியும். தொழில்நுட்பம் மட்டுமின்றி, உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழிலாளர் குடியிருப்பு, ஆய்வுக்கூடம் என எல்லா தேவைகளையும் படிப்படியாக நிறைவேற்ற முடியும்.துறை சார்ந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மத்தியில், ஜவுளித்துறை குறித்த புரிதல் மேலோங்கும். பட்ஜெட்டில், ஜவுளித்துறை வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டங்களை அறிவிப்பதற்கான வாய்ப்பு உருவாகும். ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு இது முதல் படி. இதே போல், மத்திய அரசும், ஜவுளித்துறைக்கான குழுவை அமைக்கவேண்டும்.
பசுமைச்சான்று
சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன்:போட்டி நிறைந்த உலகில், ஆடை உற்பத்தி செலவினங்களை குறைக்க, தொழில்நுட்ப மேம்பாடு அவசியமாகிறது. ஆலோசனை குழு அமைவதன்மூலம், ஜவுளித்துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி வேகம் பெற வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டினரே வியக்கும் வகையில் சாயக்கழிவு நீரை ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கும் கட்டமைப்புகள் திருப்பூரில் உள்ளன.
இந்த தொழில்நுட்பத்தை தமிழகம் முழுவதும் பரவச்செய்வதன்மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய ஜவுளித்துறை வளர்ச்சி நிலையை அடைய முடியும். சுத்திகரிப்பு மையங்களை அங்கீகரிக்கும் வகையில், அரசு பசுமை சான்று வழங்கலாம்.இதன்மூலம், உள்நாட்டிலும், உலக அரங்கிலும், திருப்பூர் பின்னலாடை ரகங்களின் அந்தஸ்து மேலும் உயரும். ஆலோசனைக்குழு மூலம், திருப்பூர் சாய ஆலை துறையினரின் இத்தகைய கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும்.