கடலுார்:வேப்பூர் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த சேவூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. கோவிலை கோனார் சமூகத்தினர் நிர்வாகம் செய்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக கோனார் சமூகத்திற்கும், மற்ற சமூகத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இப்பிரச்னையை வேப்பூர் போலீசார் மற்றும் திட்டக்குடி வருவாய் துறையினர் சமாதானம் செய்து வந்தனர். தொடர்ந்து, கோவில் திருப்பணிகளை செய்து, வரும் 3ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த சேவூர் கிராம மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை கோனார் சமூகத்தினர் கோவிலில் கருடன் கொடி கம்பம் நடும் நிகழ்ச்சி நடத்தினர்.
இதனால், ஆத்திரமடைந்த உடையார் உள்ளிட்ட மற்ற சமூகத்தினர் கோவிலுக்கு திரண்டு வந்து வாக்குவாதம் செய்தனர். இதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. வேப்பூர் சப் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக இரு தரப்பினரும் போலீசார் முன்னிலையில் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். பின்னர் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் சமாதானம் கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேவூர் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.