பல்லடம்: பாவு நுால் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால், திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறிகளின் இயக்கம் படிப்படியாக பாதிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர், கோவை மாவட்டங்களில், 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம், தினசரி ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தி ஆகின்றன. சமீப நாட்களாக, நுால் விலை ஏற்றம் துணி உற்பத்தியாளர்களை பெரிதும் பாதித்து வருகிறது.
பஞ்சு, நுால் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தொழில் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில், நுால் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்டித்து, கடந்த 22ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை, உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்தனர்.
போராட்டத்தை தொடர்ந்து, தினசரி, 20 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜவுளி உற்பத்தியாளர்களின் இந்த போராட்டம் காரணமாக, விசைத்தறி இயக்கம் பாதிக்கப்பட்டு வருகிறது.
விசைத்தறியாளர்கள் கூறுகையில், 'ஜவுளி உற்பத்தியாளர் மூலம் பாவு நுால்கள் பெற்று கூலிக்கு நெசவு செய்து வருகிறோம். நுால் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பாவு நுால் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட பாவு நுால்கள், ஓரிரு தினங்களுக்கு வரும். உற்பத்தி நிறுத்த போராட்டத்தால், திருப்பூர் மாவட்டத்தில், 30 சதவீதத்துக்கும் மேல் தறிகள் நின்றுள்ளன.
வரும் வாரத்தில், பாவு நுால்கள் இன்றி, தறிகள் இயக்கம் மேலும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.இதனால், உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், விசைத்தறி சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மத்திய, மாநில அரசுகள், மவுனம் சாதிக்காமல், தொழில்துறையின் பிரச்னைகளை களைய முன்வர வேண்டும்'' என்றனர்.
நுால் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்டித்து, கடந்த 22ம் தேதி முதல் ஜுன் 5ம் தேதி வரை, உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை ஜவுளி உற்பத்தியாளர்கள்அறிவித்தனர். போராட்டத்தை தொடர்ந்து, தினசரி, 20 கோடி ரூபாய் மதிப்பிலானஉற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.