சென்னை : ''உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பல்வேறு பொருட்களுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த வாய்ப்பை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தெரிவித்தார்.
'ஸ்வதந்த்ரா' அறக்கட்டளை, ராணுவ தயாரிப்பு துறை ஆதரவுடன், 'டிட்கோ' எனும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் லகு உத்யோக் பாரதியுடன் இணைந்து நடத்தும், முதல் தனியார் ராணுவ கண்காட்சி, சென்னை வர்த்தக மையத்தில் மூன்று நாள் நடக்கிறது.
'சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்தும் ராணுவம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி' என்ற தலைப்பிலான இந்த கண்காட்சியை துவக்கி வைத்து, தக் ஷிண பாரத தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அருண் பேசியதாவது:
தொழில் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை நம் நாட்டின் மிகப்பெரிய சொத்து. 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், ராணுவத்திற்கு தேவையான தளவாடங்களை தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ராணுவத்திற்கு தேவையான தளவாடங்களை தயாரித்து வழங்குவதற்கு, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பை இந்த தளம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக, சுய வாழ்வு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரமும் உயரும். இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதற்காக, கண்காட்சியில் பங்கேற்றுள்ள அனைத்து நிறுவனங்களில் இருந்தும், இரண்டு பிரதிநிதிகளை தேநீர் விருந்துக்கு அழைக்கிறேன்.விருந்தின் போது அவர்களுடன் நேரடியாக உரையாட முடியும். அவர்களின் தேவையை, மத்திய அரசுக்கு எடுத்துச் செல்ல முடியும்.
வளர்ந்த நாடுகளை பொறுத்தவரை, அவர்களின் ராணுவப் படைகளில், 40 சதவீதம் அதிநவீன தொழில்நுட்ப தளவாடங்கள்; 30 சதவீதம் நடப்பு தொழில்நுட்ப தளவாடங்கள் மற்றும் 30 சதவீதம் பழைய தொழில்நுட்ப தளவாடங்கள் உள்ளன.இந்தியாவில், 30 சதவீதம் அதி நவீன தொழில்நுட்ப தளவாடங்கள்; 40 சதவீதம் நடப்பு தொழில்நுட்ப தளவாடங்கள் மற்றும் 30 சதவீதம் பழைய தொழில்நுட்ப தளவாடங்கள் உள்ளன. இவற்றை நாம் மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பேசியதாவது:
முதல் தனியார் ராணுவ கண்காட்சி சென்னையில் நடக்கிறது. இது போன்ற ராணுவ கண்காட்சி நிறைய இடங்களில் நடைபெற வேண்டும் என, ராணுவ அமைச்சர் விரும்புகிறார்.உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பல்வேறு பொருட்களுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.இந்த வாய்ப்பை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழகம் மற்றும் உத்தர பிரதேசத்தில், ராணுவ தொழில் பெருவழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக, இந்த வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.'இந்தியா -- ஆப்ரிக்கா' பொருளாதார நிறுவனம், இந்தியாவை ஆதரிக்கிறது. குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆதரிக்கிறது. இங்குள்ள நிறுவனங்கள், ஆப்ரிக்கா நிறுவனங்களுடன் இணைந்து, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சீனா அந்த வாய்ப்பை பெற, ஆப்பிரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்கிறது. இருந்தாலும், ஆப்ரிக்கா இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கிறது. நம்பிக்கையுடன், கடுமையாக பணிபுரிந்தால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ஸ்வதந்த்ரா அறக்கட்டளை நிறுவனர் ராமசுப்பிரமணியன், கண்காட்சியின் வழிகாட்டல் குழு தலைவர் சீதாராமன். லகு உத்யோக் பாரதியின் தேசிய இணைச் செயலர் மோகன சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.